கடுமையான ஆஷஸ் டெஸ்ட்க்கு இடையே மலர்ந்த ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஜோடியின் வீடியோ இணைப்பு

0
148

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் எட்டாம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மிக அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை (fifer) கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அதனுடைய முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 148 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என அதிரடியாக அடித்து 152 ரன்கள் குவித்தார். இன்று 3-வது நாளில் இங்கிலாந்து அணி அதனுடைய 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

மைதானத்தில் வைத்து தனது காதலை சொன்ன இங்கிலாந்து ரசிகர்

போட்டி ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இங்கிலாந்து ரசிகர் ஒருவர் தனது ஆஸ்திரேலிய நண்பியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். அனைவர் முன்னிலையிலும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் அவர் தன்னுடைய காதலை தனது நண்பியடம் கூறினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்த பெண்ணும் எந்தவித யோசனையும் இன்றி அவர் கூறிய அந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். அழகான இந்த காதல் தருணத்தை சுற்றி இருந்த அனைத்து ரசிகர்களும் கைதட்டி விசிலடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

நிதான ஆட்டம் ஆடி வரும் இங்கிலாந்து

278 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே ஒரு விக்கெட்டை இழந்தது. ரோரி பர்ன்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹமீத் மற்றும் டேவிட் மலான் இணைந்து சற்று நிதானமாக விளையாடினார். இருப்பினும் ஹமீத் 24 ரன்களில் அடுத்தபடியாக ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

2 விக்கெட் பறிபோன நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டேவிட் மலானுடன் இணைந்து தற்பொழுது வரை மிக நிதானமாக விளையாடி வருகிறார். இருவருமே அரை சதம் குவித்து தற்பொழுது சதத்தை நோக்கி மிக அற்புதமாக பேட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.