போட்டி முடிந்ததும் ரவி சாஸ்திரிக்கு ஷாம்பெய்ன் பாட்டில் பரிசளித்த ரிஷப் பண்ட் – வீடியோ இணைப்பு

0
283
Rishabh Pant and Ravi Shastri

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின் கடைசித் தொடராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டெஸ்ட் போட்டியில் கோவிட்டால் விளையாட முடியாது போன இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அதற்கடுத்து டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கு கேப்டனாக தலைமையேற்று அணியை வழிநடத்தினார்.

இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இலண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலியால் விராட் கோலி விளையாடவில்லை. அவருக்குப் பதில் ஸ்ரேயாஷ் ஐயர் இடம்பெற, இந்திய அணி பும்ராவின் பந்துவீச்சிலும், கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி பேட்டிங்கிலும் அபாரமாய் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

அடுத்து இரண்டாவது போட்டி இலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு இங்கிலாந்து அணியை 246 ரன்களில் மடக்கினாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாகச் செயல்படாததால், இங்கிலாந்து அணி நூறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது!

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் 1-1 என சமநிலையை எட்ட, நேற்று தொடரை யாருக்கென்று மூன்றாவது கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டர் ஓல்ட் டிராபோர்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் 60, ஜேசன் ராய் 41 என இருவர் மட்டுமே சுமாராய் கைக்கொடுக்க, ஐம்பது ஓவர்கள் முடிவில் 259 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய இந்திய அணி 72 ரன்களுக்குள் ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதற்கடுத்து ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்து 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஹர்திக் பாண்ட்யா 55 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரிஷாப் பண்ட் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 125* ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார். இந்திய ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. ரிஷாப் பண்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஹர்திக் பாண்ட்யா தொடர் நாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

இந்தப் போட்டியின் முடிவுக்குப் பின்னர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து, தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி மைதானத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருக்க, ரிஷாப் பண்ட் அவரிடம் ஓடி வந்து, சில நொடிகள் பேசிவிட்டு, அவரிடம் ஷாம்பெய்ன் பாட்டிலை கொடுத்து விட்டுச் சென்றார். பின்பு சென்றார். ரவி சாஸ்திரியின் பயிற்சி காலத்தில்தான் ரிஷாப் பண்ட்டின் இந்திய அணிக்கான சர்வதேச கிரிக்கெட் பயணம் முதன் முதலில் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் தேசிய அணியின் பயிற்சியாளரைப் போட்டி முடிந்ததும் தேடிவந்து பேசி ஷாம்பெய்ன் பாட்டிலை தந்து அன்பையும், மரியாதையையும் காட்டியிருக்கிறார் ரிஷாப் பண்ட்!