பாகிஸ்தான் டாப் ஆர்டரை நிலை குலைய வைத்து 4 விக்கெட்டுகள் எடுத்த கீப்பர் நிக்கோலஸ் பூரன் – வீடியோ இணைப்பு

0
1207
Nicholas Pooran 4 wickets

வெஸ்ட் இன்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. கோவிட் தொற்றால் தள்ளி வைக்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது. முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் பாபர் ஆஸமின் சதம் மற்றும் குல்தில் ஷா இறுதிக்கட்ட அதிரடியிலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இமாம் உல் ஹக் மற்றும் கேப்டன் பாபர் ஆஸமின் அரைசதங்களாலும், மொகம்மத் நவாஸின் சிறப்பான பந்துவீச்சாலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் இந்தத் தொடரின் கடைசிப் போட்டி இன்று மாலை முல்தான் மைதானத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி பாகிஸ்தானின் இன்னிங்சை துவங்க இமாம் உல் ஹக், பகார் ஜமான் களமிறங்கினார்கள்.

இந்த இருவரும் மிகச்சிறப்பாக ஆட்டத்தைத் துவங்கி, பார்ட்னர்ஷிப்பில் அரைசதத்தைக் கடந்து, பாகிஸ்தான் அணிக்கு வலிமையான துவக்கத்தை தந்தனர். இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் ஷாய் ஹோப் விக்கெட் கீப்பர் பணியைக் கவனிக்க, பாகிஸ்தானின் லெப்ட் ஹேன்ட் பேட்ஸ்மேன்களுக்காக, ஆச்சரியப்படும் வகையில் கேப்டன் பூரன் ஆட்டத்தின் 16வது ஓவரை வீச வந்தார்.

வெஸ்டீ இன்டீஸ் கேப்டனின் இந்த முயற்சிக்கு உடனடி பலன் கிடைத்தது. 16.4 வது ஓவரில் பூரனின் பந்தில் பகார் ஜமான் க்ளீன் போல்டானார். அடுத்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக்கையும் சாய் ஹோப் மூலம் வெளியேற்றினார் பூரன். அடுத்து மொகம்மத் ஹாரிஸ், மொகம்மத் ரிஸ்வான் இருவரையும் வீழ்த்தி பாகிஸ்தானை தடம்புரள வைத்துவிட்டார் பூரன்.

இதற்கு முன் சர்வதேச போட்டிகளில் ஒருமுறை மூன்று பந்துகள் மட்டுமே வீசி இருக்கும் பூரன், பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் ஒருமுறை ஒரு ஓவர் பந்துவீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். லிஸ்ட் ஏ போட்டிகளில் மூன்று பந்துகள் பந்துவீசி இருக்கிறார். தற்போது சர்வதேச போட்டியில் இரண்டாம் முறையாக பந்துவீசி 10 ஓவர்களில் 48 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருக்கிறார்!