ஒரே ஓவரில் 34 ரன்கள் ! 4 ஓவரில் 82 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான உலக சாதனை படைத்துள்ள இங்கிலாந்து வீரர் மெக்கியர்னன் – வீடியோ இணைப்பு

0
471
Mattie McKiernan 82 runs in 4 overs

இங்கிலாந்தில் நடக்கும் 2022 டி20 பிளாஸ்ட் தொடர் மே மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பான இந்தத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நான்காவது காலிறுதிப் போட்டிப் போட்டியில் நேற்று சோமர்செட் – டெர்பிஷியர் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெர்பிஷியர் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. சோமர்செட் வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ஓவருக்கு 10 ரன்கள் குறையாமல் அடித்தனர்.

2வது விக்கெட்டுக்கு கை கோர்த்த டாம் பேன்டன் மற்றும் ரூசவ் நாலாப் பக்கமும் சிக்ஸர்கள் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பேன்டன் 73 ரன்கள் சேர்த்தப் பின் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ரைலீ ரூசவ் 258 எனும் இமாலய ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார். 36 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என மொத்தம் 93 ரன்கள் அடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார். மெக்கியர்னன் வீசிய ஓவரில் 34 ரன்கள் விளாசினார் ரைலீ ரூசவ்.

- Advertisement -

டெர்பிஷியர் ஸ்பின்னர் மெக்கியர்னன் தான் வீசிய நான்கு ஓவரில் 82 ரன்கள் விட்டுக் கொடுத்து உலகில் எந்த வீரரும் படைக்காத மோசமான சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன் சர்மத் அன்வர் எனும் பந்து வீச்சாளர் 4 ஓவரில் 81 ரன்கள் கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. நேற்று அதை மெக்கியர்னன் தாண்டினார்.

இறுதியில் சோமர்செட் அணியின் லமோன்பி 9 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என அதிரடி காட்ட 20 ஓவரில் 265 ரன்களை எட்டியது. இந்த இமாலய இலக்கை நோக்கி டெர்பிஷியர் ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். முதல் பாதியில் மட்டுமல்ல இரண்டாம் பாதியிலும் டெர்பிஷியர் வீரர்கள் மோசமான கிரிக்கெட் விளையாடினர். வெறும் 11 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் வெறும் 75 ரன்களுக்கு இழந்து வெளியேறியது. 191 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட் அணி அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.