ஆட்டமிழந்தப் பின் கோபத்தில் பேட்டை தூக்கி எறிந்த மேத்யூ வேட் – வீடியோ இணைப்பு

0
3255
Mathew Wade throws his bat in angry

2022 ஐ.பி.எல் சீசனின் 67வது போட்டியில், மும்பையின் வான்கடே மைதானத்தில், ப்ளே-ஆப்ஸ் வாய்ப்புக்கான மிக முக்கியமான போட்டியில் பெங்களூர் அணி குஜராத் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் தோற்றால் ஏறக்குறைய ப்ளேஆப்ஸ் வாய்ப்பிலிருந்து பெங்களூர் அணி வெளியேறிவிடும். குஜராத் அணி இருபது புள்ளிகளோடு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் குஜராத் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பெங்களூர் அணியில் முகம்மத் சிராஜிக்குப் பதில் சித்தார்த் கவுல் இடம் பெற்றிருக்கிறார். முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வுசெய்ய, பேட்டிங்கில் வந்த சுப்மன் கில் உடனே வெளியேற, சஹா ப்ளே-ஆப்ஸ் முடிந்து வெளியேறினார்.

இதற்கு நடுவில் களம்புகுந்த மேத்யூ வேட் ஒரு சிக்ஸ், இரு பவுண்டரி என சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கினார். ஆட்டத்தில் மேக்ஸ்வெல் வீசிய ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்து, அவரின் கால்காப்பில் பட, அம்பயர் அவுட் தந்தார். ஆனால் உடனே பேட்டில் பட்டதாகக் கூறி உறுதியாக, மூன்றாவது அம்பயரிடம் சென்றார். டிவி ரீ-ப்ளேவில் பார்க்கும் பொழுது, பந்து பேட்டில் பட்டது. ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்துபட்டதாகக் காட்டவில்லை. இதனால் கள அம்பயரின் அவுட் முடிவை, மூன்றாவது அம்பயரும் ஆமோத்து அவுட் தந்தார். இதனால் விரக்தி அடைந்து வெளியேறிய மேத்யூ வேட், ஓய்வறைக்குள் ஹெல்மட்டை வீசி எறிந்து, பேட்டை அடித்து உடைக்க செய்தார். இது ஆட்ட கேமராவில் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் அம்பயர்களின் முடிவு சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. கொல்கத்தா அணியுடன் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட எல்.பி.டபிள்யூ, மும்பை அணியுடன் விராட்கோலிக்கு வழங்கப்பட்ட எல்.பி.டபிள்யூ முடிவுகள் பெரும் விவாதத்தை இதற்கு முன்பே கிளப்பி இருந்தன. தற்போது மேத்யூ வேட்டிற்கு வழங்கப்பட்ட இந்த அவுட் முடிவும், ஐ.பி.எல் தொடரின் அம்பயர்களின், தொழிற்நுட்பத்தின் தரத்தின் மீது விமர்சனங்களைக் கிளப்பி இருக்கிறது!