ஐபிஎல் கேரியரில் முதல் 5 விக்கெட் ஹால் ; ரன் ஏதும் விட்டுக் கொடுக்காமல் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா – வீடியோ இணைப்பு

0
459
Jasprit Bumrah 5 fer vs KKR

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 56வது போட்டியில், நவி மும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், ரோகித் சர்மாவின் மும்பை அணியும், ஸ்ரேயாஷின் கொல்கத்தா அணியும் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இரு அணிகளுக்கும் ஏறக்குறைய ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டன என்றே கூறலாம்.

கொல்கத்தா அணி தான் விளையாடிய 11 போட்டிகளில், 4 போட்டிகளில் வென்று, 8 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் 9வது இடத்திலும், மும்பை அணி தான் விளையாடிய 10 போட்டிகளில் 2 ஆட்டங்களில் மட்டுமே வென்று, 4 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் கடைசிப் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ரகானே, வெங்கடேஷ், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி என பழைய கொல்கத்தா அணி களமிறங்கி இருக்கிறது, மும்பை அணியில் முன்கை காயத்தால் சூர்யகுமார் ஐ.பி.எல் தொடரை விட்டே வெளியேறி இருக்க, அவருக்குப் பதிலாக ரமன்தீப்சிங் இடம் பெற்றிருக்கிறார்.

முதலில் மும்பை இன்டியன்ஸ் அணி டாஸை வென்று கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வெங்கடேஷ் மற்றும் ரகானே சிறந்த துவக்கத்தை அளித்தனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு நிதிஷ் ராணாவும் சிறப்பாக விளையாட கொல்கத்தா அணியின் ரன்ரேட் ஏறக்குறைய ஓவருக்கு பத்து ரன்களெனவே இருந்தது.

14வது ஓவரில் ஸ்ரேயாஷ் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி, 14 ஓவர்களில் 136 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று வலுவாகவே இருந்தது. 15 வது ஓவருக்கு வந்த பும்ரா, நிதிஷ் ராணா, ஆன்ட்ரூ ரஸலை ஒருசேர வெளியேற்றி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி அளித்து, அடுத்து 17 வது ஓவரில் மேலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தா அணியை இருபது ஓவர்களுக்கு 165 ரன்கள் என்று அபாரமாய் தடுத்து நிறுத்திவிட்டார். மொத்தம் நான்கு ஓவர்கள் வீசி பத்து ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐ.பி.எல்-ல் அவரது சிறந்த பந்துவீச்சு இதுதான். மேலும் இதுவரை ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்த பும்ரா, இந்த ஒரு ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!