புஷ்பா திரைப்பட பாணியில் விக்கெட்டை கொண்டாடிய ஜடேஜா – இணையதளத்தில் வைரலாகும் வீடியோ இணைப்பு

0
260
Ravindra Jadeja Pushpa Style Celebration

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ரோகித் பதவியேற்றது முதல் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு இரண்டு தொடர்களிலும் கோப்பை வென்று கொடுத்தார். தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடர் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. ஆனால் அங்கு ஏற்பட்ட சில கொரோனா பாதிப்புகள் காரணமாக ஹசரங்கா, தீக்ஷனா ஆகிய முக்கிய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

ஆட்டத்தின் முதல் போட்டியில் இலங்கை டாஸ் வென்று இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறிய இஷன் கிஷன் இந்த முறை சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய கேப்டன் ரோகித் 44 ரன்கள் எடுத்தார். கிஷன் 89 ரன்களில் வெளியேற, அவருக்குப் பின்பு வந்த ஸ்ரேயாஸ் அரைசதம் கடந்து அசத்தினார். இந்த மூவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் எடுத்தது.

கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு அந்த அணியின் வீரர்கள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் போவதும் வருவதுமாக இருந்தனர். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கூட அமைக்காமல், இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் இரண்டு துவக்க வீரர்களையும் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின்பு களம் கண்ட அனுபவ வீரர் சந்திமால் இலங்கை அணிக்கு சிறப்பாக விளையாடி கொடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று அந்நாட்டு ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் சந்திமால் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். இந்த விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஜடேஜா சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்பட பாணியில் சைகை செய்து இந்த விக்கெட்டை கொண்டாடினார். புஷ்பா திரைப்படம் இந்தியாவையும் தாண்டி பல உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருவதால் இந்த ஜடேஜாவின் கொண்டாட்டத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.