நான் ஐ.பி.எல் தொடரில் வேலை செய்வதற்கு இதுதான் காரணம் ; கிடைக்கும் வருமானத்தை இப்படிதான் செலவு செய்கிறேன் – கௌதம் கம்பீர்

0
64
Gautham Gambhir

எல்லா துறைகளிலுமே ஒரு குழு வேலையில் சிலரது பங்களிப்புகள் வெளியில் தெரியாமலே போய்விடும். அவர்களைப் பெரியதாய் யாரும் கொண்டாடவும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அதே குழுவில் அதிரடி காட்டிய இல்லை முன்நின்ற யாராவது ஒருவர் வெற்றியின் மொத்தப் புகழுக்கும் உரியவராய் மக்களால் மாறிவிடுவார்.

இந்திய கிரிக்கெட்டில் அன் ஸங் ஹீரோவாக பெரிய பெரிய வெற்றிகளில் பங்களிப்பை செய்தவர்தான் டெல்லி வீரரான கவுதம் காம்பீர். மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிகளில் கணிசமான பங்கு கவுதம் கம்பீருக்கு இருக்கிறது.

- Advertisement -

2011 உலகக்கோப்பை இலங்கை உடனான இறுதிபோட்டியில் சேவாக், சச்சின் விக்கெட்டை இந்திய அணி சீக்கிரத்தில் இழந்தாலும், இவர் நிலைத்து நின்று விராட்கோலி, தோனியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்புகள்தான் அணி கோப்பையை வெல்ல ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. ஆனால் இறுதிவரை களத்தில் நின்று 91* ரன்கள் அடித்த மகேந்திர சிங் தோனிக்கே எல்லாப் புகழும் சென்று சேர்ந்தது. இன்று வரையில் இந்த நிகழ்வு கிரிக்கெட் இரசிகர்களிடையே விவாதத்துக்குரிய விசயமாகத்தான் இருக்கிறது.

2018ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெற்ற கவுதம் கம்பீர், அதற்குப் பிறகு ஒரு பெரிய தேசியக்கட்சியில் சேர்ந்து, கிழக்கு டெல்லி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இதையடுத்து இந்த ஐ.பி.எல் தொடரில் புதிய அணியாக வந்த லக்னோ அணிக்கு மென்டராகவும் கவுதம் காம்பீர் இருந்தார். மேலும் லக்னோ அணிக்கு மெகா ஏலத்தில் நேரடியாகவும் கலந்துகொண்டார். லக்னோ அணியின் உருவாக்கத்திற்கு மூளையாக இருந்தார் என்றே கூறலாம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி கிரிக்கெட் அணியில் ஐ.பி.எல் தொடரில் வேலை செய்வது, அரசியல் வட்டத்தில் விமர்சனமாக முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இது சம்பந்தமாகப் பேசியுள்ள கவுதம் கம்பீர், அதில் “5000 பேருக்கு ஜன் ரசோயிலிருந்து உணவளிக்க மாதத்திற்கு 25 இலட்சம் செலவாகிறது. வருடத்திற்கு இதற்கு மூன்று கோடி தேவைப்படுகிறது. பகத்சிங் நூலகம் அமைக்க 25இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கெல்லாம் நான் நாடாளுமன்ற நிதியில் இருந்து செய்வதில்லை. என் வீட்டில் பணம் காய்க்கும் மரமும் இல்லை. இப்படி ஐ.பி.எல் தொடரில் வர்ணனையாளராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றுவதில் இருந்துதான் பணம் கிடைக்கிறது. இந்தப் பணத்தைதான் நான் மக்களுக்குச் செலவு செய்கிறேன். இந்த உண்மையைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்!