இங்கிலாந்தில் தமிழில் வணக்கம் கூறி அசத்திய முன்னாள் சி.எஸ்.கே வீரர் சாம் பில்லிங்ஸ் – வீடியோ இணைப்பு

0
257
Sam Billings speaking tamil

தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், மூன்று டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது!

இதற்காக இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு ஒருநாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. 12 ஆம் தேதி நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், 14 ஆம் தேதி நடந்த இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி செஸ்டர் லீ வீதி, ரிவர்ஸ் சைட் மைதானத்தில் நடக்கிறது. இன்று ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸின் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகும். போட்டி நடப்பது அவருடைய இளவயது மைதானம் ஆகும்!

இந்த ஆட்டத்திற்கு இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் இருக்க, அதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாம் பில்லிங்ஸிடம் இந்திய இரசிகர்கள் இருவர் ஆட்டோகிராப் கேட்க, ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கு போட்டுக் கொடுத்த சாம் பில்லிங்ஸ், அதற்கடுத்து தமிழில் சுத்தமாக வணக்கம் என்று கூறிவிட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

2018-ஆம் ஆண்டு சாம் பில்லிங்ஸை அவரது அடிப்படை விலையான இரண்டு கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருந்தது. அடுத்த 2019ஆம் ஆண்டும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்தார். இந்தக் காலக்கட்டத்தில் அவர் கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தையான வணக்கத்தை மறக்காமல் இருந்து, தற்போது ஆட்டோகிராப் கேட்ட இந்திய இரசிகர்களிடம் தெரிவித்து இருக்கிறார். தற்போது இவர் கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார்!