கடைசி ஓவரில் ரஸலுக்கு எதிராக 18 ரன்களை கட்டுப்படுத்திய அல்ஜாரி ஜோசப் ; வெகுதூரம் ஓடி அபார கேட்ச் பிடித்து வெற்றியை உறுதி செய்த பெர்குசன் – வீடியோ இணைப்பு

0
94
Ferguson takes Russell Catch

இன்று ஐ.பி.எல்-ன் டபுள் ஹெட்டர் நாளில், முதல் ஆட்டத்தில் ஹர்திக்கின் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஸ்ரேயாஷின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் பரபரப்பாக திருப்பங்களோடு மோதி முடித்திருக்கின்றன.

முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பேட்டிங்கையே தேர்வு செய்ய, உள்ளே வந்த கில் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஹர்திக், சஹா இருவரும் அழகாக அணியை மீட்டெடுக்க, ஹர்திக் அரைசதமடித்து ஆட்டமிழக்க, ரஸல் இறுதி ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, குஜராத் 156 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.

அடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணிக்குத் துவக்கம் தர வந்த பில்லிங்சும், நரைனும் ஏமாற்ற, அடுத்து வந்த ராணா, ஸ்ரேயாஷ், வெங்கடேஷ் என எல்லோரும் ஏமாற்றினர். ரிங்கு சிங் மட்டுமே தாக்குப்பிடித்து ஆட, அடுத்து வந்த ரஸல் நான்கு ரன்களில் அவுட்டிலிருந்து தப்பித்து, அதிரடியாய் அணியை வெற்றியை நோக்கி உமேஷை வைத்துக்கொண்டு பயணிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட, அல்ஜாரி ஜோசப் வீசிய லோ-புல்டாஸை தூக்கி அபாரமாக லாங்-ஆன் திசையில் சிக்ஸ் அடித்தார் ரஸல். அடுத்த பந்தை சரியான அளவில் பவுன்ஸாக வீச, ரஸல் அதை லெக்-ஸைட் மடிக்கி அடிக்க, பந்து லாங்-லெக் திசையில் பறக்க, அபாரமாக கேட்ச்சாக்கினார் பெர்குசன். அதற்குப் பிறகு வந்த செளதியும், உமேசும் ஒன்றுமே செய்ய இயலாததால் குஜராத் தன் ஆறாவது வெற்றியைப் பெற்றது!