“சாம்சன்.. சாம்சன்” கரகோசமிட்ட ரசிகர்கள்; சிரித்துக்கொண்டே சிக்ஸர் அடித்த சாம்சன் – வீடியோ!!

0
425

“சாம்சன்.. சாம்சன்” என கத்தி கூச்சலிட்ட ரசிகர்களுக்கு தனது பேட்டிங் மூலம் ரிப்ளை கொடுத்து இருக்கிறார் சஞ்சு சாம்சன்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 38.1 ஓவர்கள் மட்டுமே பிடித்த ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் எடுத்திருந்தது. சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும் ரியன் பால் இறுதிவரை அவுட்டாகாமல் 39 ரன்களும் எடுத்திருந்தனர். நட்சத்திர வீரர் ராசா மற்றும் துவக்க வீரர் இன்னசென்ட் ஆகியோர் தலா 16 ரன்கள் அடித்திருந்தது அந்த அணிக்கு அதிகபட்சமாக இருந்தது. பந்துவீச்சில் அசத்திய தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணிக்காக கீப்பிங் செய்த சஞ்சு சாம்சன் மூன்று கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் செய்தார். அவற்றில் இரண்டு கேட்ச் பெரும் பாராட்டுதலை பெற்றிருந்தது. இதனை அடுத்து இந்தியா அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் கேஎல் ராகுல் இருவரில், ராகுல் துரதிஷ்டவசமாக ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். தவான் மற்றும் கில் இருவரும் நன்றாக விளையாடி வந்தனர். இருவரும் தலா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் ஹூடா இருவரும் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினர்.

ஹூடா 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 39 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். அதில் நான்கு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இந்திய அணி ஸ்கோரை சமன் செய்தபோது மைதானத்தில் இருந்து ரசிகர்கள் “சாம்சன்.. சாம்சன்” என கத்தி கூச்சலிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்தினர். அதை சிரித்துக்கொண்டே பார்த்த சஞ்சு சாம்சன் அசத்தலாக சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்தார். இதன் வீடியோ பதிவு சப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது

மூன்று கேட்ச் மற்றும் முக்கியமான கட்டத்தில் 43 ரன்கள் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட சாம்சன் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த அவர், “மிடில் ஆர்டரில் நன்றாக விளையாடினால் அன்றைய நாள் நல்ல மனநிலையோடு இருக்கும். அப்படியாக உணர்கிறேன். கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் இந்திய அணிக்காக பங்களிப்பை கொடுத்தது மனநிறைவை தருகிறது. இருப்பினும் ஒரு ஸ்டம்பிங் தவறவிட்டேன். அது இன்னும் உறுத்தலாக இருக்கிறது. இந்த போட்டியை பொருத்தவரை, இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பவுலிங் செய்தனர். எந்த குறையும் கூற முடியாது.” என்று பதில் அளித்தார்.