பிரித்வி ஷாவுக்கு பயங்கரமான பவுன்சர் வீசிய பும்ரா ; அதைத் தாவிக் கேட்ச் பிடித்த இஷான் கிஷன் – வீடியோ இணைப்பு

0
494
Bumrah bouncer to Prithvi Shaw

நடப்பு ஐ.பி.எல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்திற்கு முன்பான 69வது ஆட்டமான, மும்பையின் வான்கடே மைதானத்தில், இன்று டெல்லி மும்பை மோதும் போட்டி வரையில், ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பு இருந்து வருவது, இந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்குத் தீனியாக அமைந்திருக்கிறது.

மும்பை அணி தனது முதல் எட்டு ஆட்டங்களில் தோற்று, முதல் அணியாக ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருந்தது. ஆனால் 13 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று, 14 புள்ளிகளோடு இருக்கும் டெல்லி அணி இந்த ஆட்டத்தில் வென்றால், ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் அணியை வெளியேற்றி ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் என்ற நிலை நிலவுகிறது. இதனால் இந்தப் போட்டி டெல்லி, மும்பை அணி இரசிகர்களுக்குச் சமமாக பெங்களூர் அணி இரசிகர்களையும் தொலைக்காட்சி பெட்டி முன் இழுத்து வைத்திருக்கிறது.

இந்த நிலையில் டாஸில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா வென்று பீல்டிங்கை தேர்வு செய்ய மழை பெய்ய ஆரம்பித்தது. பெய்யும் மழை நிற்காமலே இருந்தால் நல்லது என்று பெங்களூர் இரசிகர்கள் உள்ளுக்குள் வேண்ட, மழையோ உடனே நின்று, வழக்கமான நேரத்திலேயே போட்டி துவங்கியது. மும்பை அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நீக்கப்பட்டு டிவால்ட் பிரிவீசும், டெல்லி அணியில் லலித் யாதவ் நீக்கப்பட்டு பிரித்வி ஷாவும் உள்ளே வந்திருந்தனர்.

டெல்லி அணியின் பேட்டிங்கை துவங்க வார்னரும் பிரித்வியும் வர, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் பும்ரா மூலம் வார்னரை வெளியேற்றினார் டேனியல் சாம்ஸ். அடுத்த ஓவரில் மிட்செல் மார்ஷை சந்தித்த முதல் பந்திலேயே ஸ்லிப்பில் கேப்டன் ரோகித் மூலம் பும்ரா வெளியேற்றினார். மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் விழ, நெருக்கடிக்குள் விழுந்தது டெல்லி அணி. பும்ரா பவர்-ப்ளேவின் கடைசி ஓவரை தனது இரண்டாவது ஓவராக வீச, டாட், 2, டாட் என முதல் மூன்று பந்துகளை ஆடிய பிரித்வி ஷா, பும்ரா பிரித்வி ஷாவை பாலோ செய்து, நேராய் ஒரு பவுன்சர் அடிக்க, அந்தப் பந்திலிருந்து தப்பிக்க நேரமில்லாமல் தடுமாறி பேட்டோடு பந்தை கையில் வாங்கி தடுமாறி விழுந்தார். எகிறிய பந்தை மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் தாவிப்பிடிக்க, பிரித்வி ஷா வெளியேற டெல்லி அணி மேலும் நெருக்கடிக்குள் விழுந்தது. ஆனால் கொண்டாட்டம் என்னவோ மும்பை அணி இரசிகர்களிடம் விட பெங்களூர் அணி இரசிகர்களிடமே அதிகம் இருந்தது!