அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள்.. இந்தியா, ஆப்கான் 2 நாட்டின் கனவை தகர்த்த 19 வயது வீரர்! – வீடியோ

0
66

கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தானுக்கு ஹீரோவாக உருவாகி இருக்கிறார் நசீம் ஷா.

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் ஃபோர் சுற்று நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணிகளும் பல பரிட்சை மேற்கொண்டன. இந்திய அணி இந்த சுற்றில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இறுதிபோட்டிக்கு முன்னேறுவதற்கு குறைவான வாய்ப்பே இருந்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கும். அதே நேரம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்திய அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி இரண்டும் வெளியேறி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரு அணிகளும் நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்ததால் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறினர். அதிகபட்சமாக ஜதரான் 35 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான் அணி.

சிக்கலான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி பந்துவீச்சிற்கு பெயர்போன ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திக்கித் தடுமாறியது. சீரான இடைவெளிகளில் விக்கெட் விழுந்ததால் பாகிஸ்தான் அணியால் சரிவிலிருந்து மீள முடியவில்லை. மிடில் ஆர்டரில் சதாப் கான் மற்றும் இப்திகார் அகமது இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதுவும் நீடிக்கவில்லை.

ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த இளம் வீரர் நசீம் சா யாரும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் இன்றி வெற்றியை பெற்று தந்தார். ஒரு தருணத்தில் பாகிஸ்தான் அணி நிச்சயம் தோல்வி அடைந்துவிடும் என்று பலரும் எண்ணி இருந்தநிலையில் இளம் வீரர் நசீம் சா, இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுதந்துள்ளது, அவரை ஹீரோவாக பார்க்க வைத்திருக்கிறது.

இரண்டு சிக்ஸர்கள் அடித்து, அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ பதிவு தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.