மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அடித்த 86-வது சர்வதேச சதத்திற்குப் பிறகு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் ஒருநாள் போட்டி வாழ்க்கையை இந்திய முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் ஒப்பீடு செய்து பேசியுள்ளார்.
கோலி தனது 55-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து 15,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியே தலைசிறந்த பேட்டர் என்று ஜாஃபர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து வசீம் ஜாஃபர் பேசும்போது “ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை போல வேறு யாரும் இல்லை. சச்சின் காலத்தில் விதிகள் வேறு மாதிரியாக இருந்தன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால் தற்போதைய சூழ்நிலை பேட்டர்களுக்கு சாதகமாக உள்ளது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “சச்சின் காலத்தில் ஒரே ஒரு பந்து மட்டுமே இருந்தது, ரிவர்ஸ் ஸ்விங் காரணமாக அதில் விளையாடுவது மிகவும் கடினம். அப்போது 4 ஃபீல்டர்கள் மட்டுமே சர்க்கிள் உள்ளே இருந்தார்கள், இப்போது 5 ஃபீல்டர்கள் என்பதால் ரன் அடிப்பது எளிதாகிவிட்டது. சச்சின் காலத்தில் சூழ்நிலைகள் கடினமாக இருந்தாலும், விராட் பேட்டிங் செய்யும் முறை, அவரது சதம் அடிக்கும் விகிதம் மற்றும் சேசிங் செய்யும் போது அவர் அடிக்கும் ரன்கள் என அனைத்திலும் அவர் முதலிடத்தில் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் தான் நம்பர் 1” என்று தெரிவித்தார்.
கடைசியாக அவர் கூறும்போது “விராட் கோலி எங்கேயும் சென்றுவிடவில்லை போல தெரிகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்து ஆடுவது எளிதல்ல. அவர் வேறு லெவலில் பேட்டிங் செய்கிறார், அதைப் பார்ப்பதே கண் கொள்ளாக்காட்சி. 55 ஒருநாள் சதங்கள் அடித்திருக்கும் அவர் மற்றும் சுப்மன் பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்தால் 300 ரன்களை சேஸ் செய்வது அவர்களுக்கு மிகச் சாதாரண விஷயம் போல இருந்தது. விராட் இப்படி விளையாடுவதைப் பார்ப்பதே நமக்குக் கிடைத்த பெருமை” என்று கூறி முடித்தார்.