ஓப்பனர் ருத்துராஜ் கெய்க்வாடுக்கு வாய்ப்பு அளிப்பது எந்த விதத்திலும் பயனில்லை – வாசிம் ஜாபர் அதிரடி பேச்சு

0
2886
Wasim Jaffer about Ruturaj Gaikwad

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. அடுத்து 3 டி20 போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் திட்டமிடப்பட்டது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியை எண்ணி வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கவுள்ளது.

அதிரடி துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் விலகியதால் மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் ஓப்பனராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. முதல் போட்டியில் மிகவும் நிதானமாக ஆடிய கிஷன் 42 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்ட்ரைக் ரேட் வெறும் 83.33 ஆகும். சேசிங்கில் இது போன்ற ஓர் இன்னிங்ஸ் மிகவும் மோசமானதாக கருதப்பட்டது.

முதல் போட்டியில் ஏமாற்றம் அளித்த இஷான் கிஷன் இரண்டாவது போட்டியில் அதைச் சரி செய்து விடுவார் என்று அனைத்து ரசிகர்களும் எண்ணினர். முதலில் பேட்டிங் செய்த கேப்டன் ரோஹித் – கிஷன் களமிறங்கினர். 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்த கிஷன் 10வது பந்தில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் ரசிகர்கள் பலர் கிஷனை வெளியேற்றி விட்டு ருத்துராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்க்க சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி வீரர் கெய்க்வாட், சென்ற ஐ.பி.எலில் ஆரஞ்சு தொப்பியைக் கைபற்றி அசத்தினார். மேலும் சையத் முஷ்டக் அலி தொடர், விஜய் ஹசாரே தொடர் போன்ற உள்ளூர் ஆட்டங்களிலும் தன் திறனை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார்.

இவ்வளவு சிறப்பாக செயல்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட், இதுவரை இந்திய அணியின் பெஞ்சில் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இது குறித்து முன்னாள் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வாசிம் ஜாபர் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “ இஷான் கிஷனுக்கு மூன்றாவது போட்டியில் நிச்சயம் இடம் அளிக்க வேண்டும். அவருக்கு நீண்ட காலம் வாய்ப்பளிக்க வேண்டும். கடைசி ஒரே ஒரு போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்டை ஆட வைப்பது எந்த விதத்திலும் எனக்கு சரியாகப் படவில்லை. அவருக்கு அடுத்து நடைபெறும் இலங்கை டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கலாம். ” என்று வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.