ரோகித் சர்மா ஓபனிங் பண்ண வேண்டாம்; இவரை அனுப்புங்கள் ; வாசிம் ஜாபர் வித்தியாச யோசனை!

0
127
Wasim Jaffer

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி மோசமான தோல்வியைக் கண்டு தொடரை விட்டு வெளியேறிய பொழுது மிகப்பெரிய அதிர்ச்சியும் விமர்சனங்களும் உருவானது. இதனை ஒட்டி இந்திய கிரிக்கெட்டில் பல மாறுதல்கள் வந்துள்ளன.

நேற்று மாலை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தேர்வு குழு அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி பெரிய அளவில் குற்றம் சொல்ல முடியாததாக இருந்தாலும், இந்த 11 பேரைக் கொண்டு ஆடும் அணியை எப்படி அமைப்பது என்கின்ற குழப்பம் இன்னும் இருக்கவே செய்கிறது.

- Advertisement -

இதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது, டி20 கிரிக்கெட் வடிவத்தில் வீசப்படும் இடதுகை சுழற்பந்து, மற்றும் லெக் ஸ்பின் வகைகளை தாக்கி விளையாட, எல்லா அணிகளிலும் இடது கை பேட்ஸ்மேன்கள் நடுவரிசையில் குறைந்தது இரண்டு பேராவது தேவையாக இருக்கிறார்கள். அப்படி இரண்டு பேராவது எல்லா அணிகளிலுமே இருக்கிறார்கள்.

தற்போது இப்படியான ஒரு அணி கலவையை அமைப்பதில்தான் இந்திய அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது. தற்போது இந்திய அணியில் இடதுகை பேட்ஸ்மேன் என்கிற தகுதியில் ரிஷப் பண்ட் மட்டுமே இருக்கிறார். ஆனால் டி20 வடிவத்தில் அவரது பேட்டிங் கவலை அளிப்பதாக இருக்கிறது. அதே சமயத்தில் அவரை அணியில் எடுத்தால் குறைந்தது நான்காம் இடத்திலாவது ஆட வைக்க வேண்டும்.

ஆனால் இந்திய அணியில் முதல் நான்கு இடங்களில் வலதுகை பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். இதனால் 11 பேர் கொண்ட அணியை எப்படி அமைப்பது? அந்த அணியில் ரிஷப் பண்ட்டை சேர்த்தால் அவரை எந்த இடத்தில் ஆட வைப்பது? என்கின்ற பெரிய குழப்பம் அணிக்குள் இருக்கிறது.

- Advertisement -

தற்போது இதற்கு தீர்வாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் யாரும் சிந்திக்காத ஒரு யோசனையை முன்வைத்து இருக்கிறார். நிச்சயமாக இப்படி ஒன்றை இந்திய அணி செய்யுமா என்றால் மிகப்பெரிய சந்தேகம் தான். அது என்னவென்றால், ரோகித் சர்மா பேட்டிங்கில் நம்பர் நான்காமிடத்தில் விளையாடுவது, ரிஷப் பண்ட் துவக்க வீரராக களமிறங்குவது!

இதுபற்றி வாசிம் ஜாபர் கூறும்பொழுது “நான் இன்னும் ரிஷப் பண்டின் சிறந்த ஆட்டத்தை டி20 போட்டியில் பார்க்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். கே எல் ராகுல், ரிஷப் பண்ட், விராட் கோலி, ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் இந்த வரிசையில் இந்தியாவின் முதல் 5 பேட்ஸ்மேன்கள் வரிசை அமையவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்!