அந்த வீரரை ஆதரிக்க சொல்லி பாகிஸ்தான் ரசிகர்கள் என்னை தாக்கினார்கள் – வாசிம் அக்ரம்!

0
338
Wasim Akram

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. அத்தோடு ஆசியக் கோப்பையில் 12வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடி, அதிகமுறை ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய அணி என்ற பெருமையைத் தக்க வைத்திருக்கிறது!

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்த நேரத்தில் ராஜபக்சே -ஹஸ்ரங்கா மற்றும் ராஜபக்சே – கருணாரத்னே ஜோடிகள் தலா அரை சத பார்ட்னர்ஷிப் கொண்டுவந்து இலங்கை அணியை 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்ட வைத்தார்கள். இதில் ராஜபக்சே 45 பந்துகளுக்கு 71 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தினார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஏமாற்றம் அளித்தார். அதேசமயத்தில் அடுத்துவந்த இப்திகார் உடன் முஹம்மது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் அணியை முன்னோக்கி எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால்170 ரன்களுக்கு அவர் ஆடிய விதம் சரியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் தேவை என்கிற நிலை உருவாகி இருந்தது. அப்பொழுது அரைசதம் அடித்து இருந்த ரிஸ்வானின் ஸ்டிரைக் ரேட் வெறும் 107 மட்டுமே.

மேலும் இந்த தொடர் முழுவதும் அவர் ஒரு மாதிரி நிலைத்து நின்று விளையாடுவதில் தான் கவனம் செலுத்தினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் பெரிய அளவில் இல்லை. ஹாங்காங் அணியுடனும் 57 பந்துகளில் 78 ரன்கள் அடித்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வீரரான வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் அது குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதற்காக சக பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களால் திட்டித் தீர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் முஹம்மது ரிஸ்வான் 6 ஆட்டங்களில் விளையாடி 281 ரன்களை 117 ஸ்டிரைக் ரேட்டில், 56 ரன்கள் ஆவரேஜில் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் அவரது ஸ்டிரைக்ரேட் 117 என்பது டி20 கிரிக்கெட்டில் மிகவும் குறைவு. அதே சமயத்தில் 5 ஆட்டங்களில் விளையாடிய விராட் கோலி 276 ரன்களை, 92 ரன்கள் ஆவரேஜில், 147 ஸ்டிரைக் ரேட்டில் விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும்பொழுது ” டி20 கிரிக்கெட்டில் நிலைத்து நின்று ஆன்கர் ரோல் செய்வதில் எனக்கு மிகவும் சந்தேகம் உள்ளது. நீங்கள் 10 விக்கெட் மற்றும் 20 ஓவர்களை மட்டுமே பெற்று உள்ளீர்கள். இதில் ஆன்கர் ரோல் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. தற்போது எனக்கு இந்தியா ஆடும் முறை மிகவும் பிடிக்கும். மேலும் இந்திய மற்றும் இலங்கை அணியில் இப்படி யாரும் ஒரு ரோலில் விளையாடுவது இல்லை. ஆனால் முஹம்மது ரிஸ்வான் பாகிஸ்தான் அணிக்கு இந்த ரோலில் விளையாடுவது நியாயமற்றது. 171 ரன்களை துரத்தும் பொழுது 16-வது ஓவரில் 107 ஸ்டிரைக் ரேட்டில் ரிஸ்வான் பேட்டிங் செய்யக்கூடாது” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “உங்களுக்கு நினைவிருந்தால் அவர் ஹாங்காங் அணிக்கு எதிராக இதே போல் விளையாடியதற்கு நான் விமர்சனம் செய்தது ஞாபகத்தில் வரும். அது ஒரு ஆரோக்கியமான விமர்சனம். ஆனால் சமூக வலைதளங்களில் மக்கள் என்னை திட்டி தீர்த்தார்கள். நான் ரிஸ்வானை ஆதரிக்க வேண்டும் என்று கூறி என்னை தாக்கினார்கள். நான் உங்களுக்கு நேரடியான சரியான கருத்தை மட்டுமே தருகிறேன். கருப்பு என்றால் கருப்பு வெள்ளை என்றால் வெள்ளை அப்படி ” என்றும் தெரிவித்தார்!