சொந்த நாட்டு வீரரையே சமூக வலைதளங்களில் தாக்கும் நீங்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள்? – இந்திய பாகிஸ்தான் ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் முரட்டு பதிலடி!

0
125
Wasim Akram

இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 15வது ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் ஏற்பட்ட தோல்வி இந்திய அணியை இந்த நிலைக்குத் தள்ளியது!

முதல் சுற்றில் பாகிஸ்தான் அணியோடு மோதிய இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங்கால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அடுத்து சிறிய அணியான ஹாங்காங் அணியை வீழ்த்தி அடுத்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

சூப்பர் 4 சுற்றில் முதல் போட்டி பாகிஸ்தான் அணியோடு நடந்தது. இதில் முதலில் பேட் செய்து நல்ல ரன்னையே இந்திய அணி எடுத்தது. ஆனால் அந்த ரன்னை பாகிஸ்தான் அணி சேஸ் செய்து வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முக்கியமான இறுதிக்கட்டத்தில், பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஆசிப் அலி இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் பந்தை தூக்கி அடிக்கப் போக, பந்து உள்வட்டத்தில் கல்லி திசையில் நின்றிருந்த இளம் வீரர் அர்ஸ்தீப் இடம் எளிமையான கேட்சாக கையில் விழுந்தது. ஆனால் அதை உலகில் யாருமே எதிர்பார்க்காத விதத்தில் அவர் தவற விட்டார்.

இதற்குப் பிறகு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதைக் கண்டித்து பாகிஸ்தான் வீரர்கள் வரை அவருக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களின் கோபம் அடங்கவில்லை. இதேபோல் கடந்த டி20 உலக கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அடித்த பந்து ஹசன் அலியிடம் எளிமையான கேட்ச்சாக கையில் விழுந்தது. ஆனால் அதை அவர் தவறவிட, பாகிஸ்தான் அணி பரிதாபமாகத் தோற்றது. இதனால் அவர் பாகிஸ்தான் ரசிகர்களால் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

தற்போது இந்த இரண்டு நிகழ்வுகளையும் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் லெஜன்ட் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கோபத்தோடு தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். முகமது ரிஸ்வான் பேட்டிங் மெதுவாக இருப்பதாக அவர் கூறியிருந்த பொழுது, ரிஸ்வானின் ரசிகர்கள் இவரை சமூகவலைதளத்தில் கடுமையாகத் திட்டி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும்பொழுது ” என்னை சமூக ஊடகங்களிலும் அல்லது தனிப்பட்ட முறையிலும் யாராவது குறி வைத்து தாக்கினால், நான் அவர்களை விட 10 மடங்கு முரட்டுத்தனமாக திருப்பித் தாக்குவேன். யாராவது என்னை விரும்பினாலும், வேடிக்கையான செய்திகளையும், நகைச்சுவையான செய்திகளையும் எனக்கு பகிர்ந்தாலும் நான் அதற்கும் அதே போல் பத்து மடங்கு திருப்பி நடந்து கொள்வேன். இதுதான் எனது கொள்கை. நீங்கள் குறிவைத்த வீரர்கள் உங்கள் குழந்தை, அவர்கள் இளம் ஆட்டக்காரர்கள், அவர்களை அப்படி தாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர் கிடையாது. அப்படி இருந்தால் தான், தொழில்முறை கிரிக்கெட் வீரர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்படியான அழுத்தங்களை சந்திக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அதெல்லாம் உங்களுக்கு தெரியாது ” என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய வாசிம் அக்ரம் ” இது ஒரு விளையாட்டு மட்டுமே. அர்ஸ்தீப்பை பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அவரின் சொந்த நாட்டு மக்கள். இதுதான் என்னைக் குழப்புகிறது. இப்படித்தான் ஹசன் அலி கடந்த உலக கோப்பையில் ஒரு கேட்சை விட்டதால், எப்பொழுதும் சமூக ஊடகத்தில் அவர் கேலி செய்யப்படுகிறார். இவர்கள் சமூக ஊடகங்களைப் படிக்கவேண்டும். அர்ஸ்தீப் அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடப் போகிற இளைஞன். கடைசி ஓவரில் அவர் அபாரமாக பந்து வீசினார். முக்கியமான ஆட்டங்களில் அழுத்தத்தின் கீழ் நானும் கேட்ச்களை தவறவிட்டு இருக்கிறேன். நீங்கள் மனிதர்களாக ஒரு தேசமாக முன்னேற வேண்டும் ” என்று காட்டமாக ஆரம்பித்தவர், வேண்டுகோளோடு முடித்தார்.