இன்று புனை மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 59 ரன்கள் கொடுத்து ஏழு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் எவ்வாறு உதவி செய்தார்? என்று கூறியிருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் மிகப்பெரிய திருப்புமுனையை 7 விக்கெட் கைப்பற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த டெஸ்ட் போட்டியை வெல்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய அவசியமாக இருக்கிறது.
முதல் செஷனில் முடியாத விஷயம்
இன்றைய போட்டியின் முதல் செஷனில் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவருடன் இணைந்து பந்து வீசிய வாஷிங்டன் சுந்தரால் விக்கெட் ஏதும் கைப்பற்ற முடியவில்லை.
இதைத்தொடர்ந்து இரண்டாவது செஷனில் ஆரம்பித்து மூன்றாவது செஷன் முடிவதற்குள் நியூசிலாந்து வசம் மீதமிருந்த ஏழு விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆளாக தனியாக எடுத்து குவித்தார். இதற்குப் பின்னணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தந்த ஐடியா குறித்து அவர் பேசியிருக்கிறார்.
அஸ்வின் அண்ணா சொன்ன ஐடியா
இது குறித்து வாஷிங்டன் சுந்தர் பேசும்பொழுது “பந்து பழையதாகி மென்மையாக மாறிவிட்டது. இதன் காரணமாக உடல் பலத்தை பயன்படுத்தி கொஞ்சம் வேகமாக வீச வேண்டும். இதைத்தான் நானும் அஸ்வின் அண்ணாவும் பேசிக் கொண்டிருந்தோம். மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக கான்வே விக்கெட்டை இப்படித்தான் அஸ்வின் அண்ணா கைப்பற்றியதாக என்னிடம் சொன்னார். நாங்கள் இதுகுறித்து பேசினோம். அதை நான் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்”
“அவருடன் இருப்பது அரிதான ஒன்று. ஆனாலும் அஸ்வின் அண்ணா மிகவும் அன்பானவர். நான் மட்டும் என்று கிடையாது யார் வந்து அவரிடம் பந்துவீச்சு சம்பந்தமாக என்ன சந்தேகங்கள் கேட்டாலும், அவர் உடனடியாக உதவுவதற்கு தயாராக இருப்பார்”
இதையும் படிங்க : இந்திய அணி இந்த டெக்னிக் வெச்சுதான் விக்கெட் எடுத்துச்சு.. அதனால இதத்தான் நாங்க பாலோ பண்ண போறோம் – நியூசி துணை கோச் பேட்டி
“அஸ்வின் அண்ணா மற்றும் ஜடேஜா அண்ணா இருவருமே தங்களுடைய அனுபவங்கள் குறித்து என்னிடம் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடும் யாருக்கும் இது மிகப்பெரிய உதவியாக அமையும். இது எனக்கு இன்று மிகவும் உதவியது. அவர்களுடன் இணைந்து இன்னும் நிறைய போட்டிகள் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.