நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு, கிரிக்கேட் வாரியம் அதிரடி முடிவு!

0
638

காயம் காரணம் வெளியில் இருந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் இருவரும் மீண்டும் தமிழக அணிக்குள் இடம் பெற்று இருக்கின்றனர்.

22 வயதான வாஷிங்டன் சுந்தர், இந்த ஆண்டு அடிக்கடி காயம்காரணமாக போதிய அளவு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக வெறும் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு கவுன்டி அணியில் விளையாடிய இவர், பீல்டிங் செய்யும் பொழுது காயம் ஏற்பட்டதால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். அதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கவுண்டியில் ஏற்பட்ட காயத்தினால் இதிலும் விளையாட முடியாமல் போனது.

- Advertisement -

மீண்டும் காயத்தில் இருந்து குணமடைந்து வந்த இவருக்கு தற்போது தமிழக அணியில் இடம் கிடைத்திருக்கிறது. சையது முஸ்தக் அலி தொடருக்கு செல்லும் 16 பேர் கொண்ட தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கேப்டன் விஜய் சங்கர் காயம் காரணமாக வெளியில் இருப்பதால் பாபா அப்ரஜித் இந்த ஆண்டு கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார். துணை கேப்டனாக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழக அணிக்குள் எடுத்துவரப்பட்டிருக்கிறார். வாஷிங்டன் சுந்தர் போன்று இவரும் தொடர்ச்சியான காயங்களால் அவதிப்பட்டு வந்ததால், கடந்த இரண்டு வருடங்களில் தமிழக அணிக்குள் வருவதும் வெளியேறுவதுமாக இருந்தார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் இவர் விளையாடவில்லை. மீண்டும் குணமடைந்து இந்த ஆண்டு ஐ பி எல் தொடரில் விளையாடிய நடராஜன், 11 போட்டிகளில் 18 விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் பிறகு ஏற்பட்ட சிறு காயம் காரணமாக தமிழக அணியில் இடம் பெறாமல் இருந்தார். தற்போது குணமடைந்திருப்பதால் மீண்டும் தமிழக அணிக்குள் இடம் பெற்று இருக்கிறார். அடுத்த மாதம் அக்டோபர் 11ஆம் தேதி துவங்கும் சையது முஸ்தக் அலி தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விஜய் சங்கர் விளையாடவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்ற இவர் நான்கு போட்டிகளில் விளையாடி வெறும் 19 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. டிஎன்பிஎல் தொடர் முழுவதும் நடராஜன் மற்றும் விஜய் சங்கர் இருவரும் காயம் ஏற்பட்டிருந்ததால் விளையாடவில்லை.

- Advertisement -

சையது முஸ்தக் அலி தொடரின் நடப்பு சாம்பியன் அணியான தமிழக அணியில் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக வெளியில் இருந்தாலும், நம்பிக்கை அளிக்கும் விதமாக அனுபவ வீரர்கள் சிலர் மீண்டும் தமிழக அணிக்குள் வந்திருப்பது கூடுதல் பலத்தை கொடுக்கிறது.