நான் மறக்க நினைப்பதை திரும்பவும் சொல்லி சொல்லி, அணி நிர்வாகம் என்னை ஒதுக்குறாங்க – கண்ணீருடன் பேசிய வார்னர்!

0
15427

நான் மறக்க நினைப்பதை அணி நிர்வாகம் மீண்டும் சொல்லி சொல்லி என்னை ஒதுக்குகிறது என்று கண்ணீருடன் பேட்டி அளித்திருக்கிறார் டேவிட் வார்னர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியது நிரூபிக்கப்பட்டதால் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பென் கிராப்ட் ஆகிய மூவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்வது உறுதியானது. இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் இருவருக்கு தலா ஒரு வருடம், பென் கிராப்ட் 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டனர்.

அப்போது வார்னர் மற்றும் ஸ்மித் அணியின் சீனியர் வீரர்களாக இருந்தனர். ஸ்மித் கேப்டன் ஆகவும், வார்னர் துணை கேப்டனாகவும் இருந்த நிலையில், இவர்களுக்கு வாழ்நாள் கேப்டன்ஷிப் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவர்களின் தடைக்காலம் முடிந்து கடந்த மூன்று வருடங்களாக மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளுக்கு டிம் பெயின் கேப்டனாக இருந்தார். அவரும் விலகிவிட்டதால் தற்போது பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளுக்கும் பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏன் வார்னர் அல்லது ஸ்மித் இருவரில் ஒருவர் கேப்டனாக இருக்கக்கூடாது என கேள்விகள் எழுந்தது. அணி நிர்வாகம் அதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் வாழ்நாள் கேப்டன்ஷிப் தடை பற்றி தனது சமீபத்திய பேட்டியில் கண்ணீருடன் பேசி இருக்கிறார் வார்னர். அவர் கூறுகையில்,

“நான் ஒன்றும் கிரிமினல் இல்லை. செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து விட்டேன். இன்றளவும் அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி வாழ்நாள் கேப்டன்ஷிப் தடை இருப்பது அபத்தமானது. கடந்த பிப்ரவரி மாதம் யார் அடுத்த கேப்டனாக டெஸ்ட் போட்டிகளுக்கும், ஒருநாள் போட்டிகளுக்கும் நியமிக்க வேண்டும்? என்ற பேச்சு வார்த்தை வந்தது. அதில் எனது பெயரும் இடம் பெற்றது.

ஆனால் குழுவினர் சிலர் எனது பழைய நிகழ்வுகளை குறிப்பிட்டு இப்படி தடை விதித்திருப்பதை மீண்டும் நினைவுபடுத்தி இருக்கின்றனர். நான் அதைப் பற்றி பேச இங்கே விரும்பவில்லை. ஏனெனில் என் வாழ்வில் மறக்க கூடிய சிலவற்றில் அதுவும் ஒன்று. எனது குடும்பமும் நானும் மிகப்பெரிய கஷ்டத்தை சந்தித்து விட்டோம். மீண்டும் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எனது பழையவற்றை நினைவுபடுத்தி பேசுவது வருத்தம் அளிக்கிறது. நான் அணிக்காக எப்படி பாடுபட்டு வருகிறேன் என்பதை அவர்களும் பார்த்து வருகின்றனர். ரசிகர்களுக்கும் நன்றாக தெரியும். இனியும் அதே தடையை அவர்கள் தொடர்வது எனக்கு மனதளவில் மிகப்பெரிய வலியை கொடுக்கிறது. எளிதாக தடையை நீக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் இன்னும் நம்பிக்கை வைக்கவில்லை.” என்றார்.