விராட் கோலி தேவையில்லை ; டி20 உலகக் கோப்பைக்கான டாப் 3 இந்திய வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள விரேந்தர் சேவாக்

0
223
Virat Kohli and Virender Sehwag

ஆஸ்திரேலியாவின் வருகின்ற செப்டம்பர் மாதம் துவங்கி நடைபெறுகின்ற டி20 உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக முக்கியமான உலகக்கோப்பையாக மாறி இருக்கிறது. கடந்த ஆண்டு யு.ஏ.இ-யில் நடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றோடு வெளியேறியது இதற்கு மிக முக்கியக் காரணமாக அமைகிறது. மேலும் இந்திய அணி உலகக்கோப்பையை கடைசியாக வென்று 11 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதனால் இந்திய அணியின் மீதும், இந்திய அணி நிர்வாகம், தேர்வாளர்கள் மீதும் நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில் வருகின்ற டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து அதிகம் ஆதரவாக பேசப்பட்ட வீரர்களாக தினேஷ் கார்த்திக்கும், உம்ரான் மாலிக்கும் இருக்கிறார்கள். அடுத்து இஷான் கிஷானுக்கும் ஆதரவு அதிகரிக்கிறது. எதிர்ப்பாகப் பேசப்படுவதில் ரிஷாப் பண்ட் முதலிடத்தில் இருக்கிறார். அதில் மெல்ல மெல்ல தற்போது இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் கொண்டுவரப் படுகிறார். கடந்த ஐ.பி.எல் தொடரில் அவரின் மோசமான பேட்டிங் பார்ம், டி20 கிரிக்கெட் வடிவத்தில் அவர் மீதான நம்பிக்கையைக் குறைத்திருக்கிறது.

இந்திய அணியின் டாப் பேட்டிங் வரிசையில் இடக்கை பேட்ஸ்மேன் ஒருவர் இருப்பது அவசியம் என்பதால் இஷான் கிஷனுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை இந்திய அணி நிர்வாகம் அளித்து வருகிறது. அவர் ஐ.பி.எல்-ல் சொதப்பினாலும், சர்வதேச டி20 போட்டிகளில் மிகச்சிறப்பாகவே விளையாடி வருகிறார். 2021 மார்ச் மாதம் டி20 போட்டியில் அறிமுகமான அவர் 16 ஆட்டங்களில் 521 ரன்களை, 34.73 ரன் சராசரியில் அடித்திருக்கிறார். மேலும் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா உடனான டி20 தொடரில் 206 ரன்களை 150 ஸ்ட்ரைக் ரேட்டில் கொண்டு வந்திருக்கிறார். இதெல்லாம் தற்போது இந்திய டி20 அணி பற்றியான பலரது கருத்துக்களில் பல மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், இந்திய டி20 அணிக்கான டாப் 3 பேட்ஸ்மேன்கள் மற்றும் டாப் 3 பாஸ்ட் பவுலர்களை பற்றி தனது முக்கியமான சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். இந்திய அணியின் திட்டங்களுக்கு நேரெதிராக அவரது கருத்து இருக்கிறது.

அவர் கூறும் பொழுது “டி20யில் ஹார்ட் ஹிட்டர்கள் என்று வரும் பொழுது இந்திய அணிக்கு நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முதல் மூன்று பேட்டர்களாக ரோகித், ரோகுல், இஷான் கிஷானுக்கு தனிப்பட்ட முறையில் உறுதியளிக்கிறேன். ரோகித் மற்றும் இஷான் கிஷானின் வலக்கை, இடக்கை கலவையை விட ராகுல், இஷான் கிஷானின் வலக்கை, இடக்கை கலவை சுவாராசியமானதாக இருக்கும். என்னை மிகவும் கவர்ந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது உம்ரான் மாலிக்தான். ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் ஷமியுடன் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராற உம்ரான் மாலிக் இடம்பெற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்!