உம்ரான் மாலிக்கை பயன்படுத்துவதில் கவனம் தேவை – கேப்டன் கே.எல்.ராகுலுக்கு அறிவுரை வழங்கும் வீரேந்திர சேவாக் எச்சரிக்கை

0
76
Virender Sehwag and Umran Malik

கடந்த ஆண்டு யு.ஏ.இ-ல் நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறி இருந்தது. தற்போது வருகின்ற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இருபது ஓவர் உலகக்கோப்பை நடக்க இருக்கும் வேளையில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்டிங் பார்மை தொலைத்து, இந்திய தேர்வாளர்களுக்கு பெரும் தலைவலியை உருவாக்கி இருக்கிறார்கள். இதே சமயத்தில் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றிடாத இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு இந்திய தேர்வாளர்களுக்கு நல்லவிதமான நெருக்கடியை உருவாக்கி இருக்கிறார்கள்.

பஞ்சாப்பின் அர்ஷ்தீப் சிங், காஷ்மீரின் உம்ரான் மாலிக், உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மோசின் கான், யாஷ் தயால் இதில் மிக முக்கியமானவர்கள். இந்திய அணிக்கு ஜாகீர் கானிற்குப் பிறகு சரியான இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற குறை நிலவி வந்த வேளையில், இந்திய இளம் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், மோசின் கான், யாஷ் தயால் மூவரும் பெரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

- Advertisement -

ஜூன் மாத முதல் வாரத்தில் இந்தியாவிற்கு வருகை தரும் தென்ஆப்பிரிக்க அணி ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் இளம் வீரர்கள் அர்ஷ்தீப் சிங்கிற்கும், உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. மற்றுமொரு இளம் வீரர் மோசின் கானிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மற்ற இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவின் அதிவேக பவுலராக விளங்கி வரும் உம்ரான் மாலிக் பற்றி சில கருத்துக்களை இந்தியாவின் பிரபல முன்னாள் வீரரான சேவாக் தெரிவித்துள்ளார். அதில் “உம்ரான் மாலிக் சிறப்பான தனித் திறமை உடைய வீரர். காரணம் அவரது வேகம். அதனால் இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் அவரை சரியான நேரத்தில், இடத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பவர்ப்ளேவில் பயன்படுத்தி ரன்களை விட்டுக்கொடுத்தால் அவர் அந்த ஆட்டத்தையே இழக்க வேண்டி வரும். எனவே இதில் கவனம் தேவை” என்று இருக்கிறார்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வீரருமான முகம்மத் அசாருதினும், உம்ரான் மாலிக் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தொடந்து மணிக்கு 150 கி.மீ வேகத்திற்கு மேல் வீசுவதால் அவர் காயமடைய வாய்ப்பிருப்பதாகவும், அதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது!

- Advertisement -