விராட் கோலிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு ; சொதப்பினால் அணியில் இருந்து நீக்கப்படுவார் – பிசிசிஐ அதிரடி முடிவு

0
835
Virat Kohli

90களின் பிற்பகுதியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் பொழுது சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்தால் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சென்றவர்கள் நிறைய உண்டு. காரணம், அவர் சிறப்பாய் விளையாடக் கூடியவர் என்பதைத் தாண்டி, மற்ற யாரும் சிறப்பாய் விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள் என்பதே!

பிறகு ஒருகட்டத்தில் சவுரவ் கங்குலி கேப்டனாகி அவர் யுவராஜ் சிங், முகம்மது கைப், தினேஷ் மோங்கியா, ஜாகீர் கான், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் போன்ற அப்போதைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துத் திறமையை வெளியே கொண்டுவர வைத்து ஒரு சிறந்த அணியை உருவாக்கி 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கு அணியை அழைத்துச் சென்றார். ஆனால் அவர் தலைமையில் 2007 உலகக்கோப்பையில் பங்களாதேஷ், இலங்கை அணிகளுடன் தோற்று முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறியது. இந்த அந்தக் காலக்கட்டத்தில் இந்திய கிரிக்கெட் இரசிகர்களை வன்முறையில் ஈடுபடும் அளவிற்குத் தூண்டியது.

- Advertisement -

இதற்குப் பிறகு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பைக்கு மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்ற இளம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி வர, மகேந்திர சிங் தோனியே மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக்கப்பட்டார். அவர் மூன்று ஐ.சி.சி கோப்பைகளையும் வென்றார்.

மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி மிக வலிமையாக விளங்கியதில் விராட் கோலிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. சச்சின் இருந்தபோதும், சச்சின் விடைபெற்ற பிறகும் பேட்டிங் படைக்குத் தலைமேற்று நின்றவர் விராட்கோலிதான். அவர் பேட்டிலிருந்து ரன்கள் மழை மாதிரி கொட்டிக்கொண்டே இருந்தது. கூடவே பல சாதனைகள் உடைக்கப்பட்டு, புது சாதனைகள் பிறந்துகொண்டே இருந்தது. எவ்வளவு பெரிய இலக்கை எதிரணி நிர்ணயித்தாலும், அதை விராட்கோலி முறியடிப்பது சர்வ சாதாரணமாக நிகழும் ஒரு சம்பவமாக மாறியது. இந்திய அணியின் ரன் மிஷின் என்று கொண்டாடப்பட்டார்.

ஆனால் 2019 நவம்பர் மாதத்திற்குப் பிறகு அவரது பேட்டில் இருந்து சதங்கள் இதுவரையில் வரவே இல்லை. இரசிகர்கள் எங்கே சதம் என்று கேட்க, அரைசதங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஆனால் அதற்கடுத்து அரைசதங்களும் பெரியளவில் வரவில்லை. நடந்து முடிந்த இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அவர் மூன்று முறை ரன் இல்லாமல் ஆட்டமிழந்தார். அந்த மூன்று முறையும் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதற்கடுத்து தற்போது இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் இருபது ரன்களை அவர் தாண்டவில்லை. அவர் பேட்டிலிருந்து ரன்கள் குறைந்துகொண்டே வருகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கயுள்ள டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியையாவது எட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் இந்திய டி20 அணியில் மூன்றாவது வீரராக விராட் கோலிக்கு இடம் தருவதா வேண்டாமா என்று இந்திய தேர்வுக்குழு குழப்பத்தில் இருக்கிறது. இங்கிலாந்துடன் நடக்கவிருக்கும் இரண்டு டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் பேட்டிங் செயல்பாடு எப்படி அமைகிறதென்பதைப் பொறுத்தே, அவர் மேலும் இந்திய டி20 அணியில் இடம் பெறுவாரா மாட்டாரா என்பதை முடிவுசெய்ய இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெசின் மீண்டும் பேட்டிங் பார்மிற்கு திரும்பி, டி20 உலகக்கோப்பையைத் பெற்றுத்தர வேண்டுமென்பதே நமது விருப்பம்!