டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகல் – பிசிசிஐ அறிவிக்கவுள்ள புதிய டெஸ்ட் கேப்டன் இவர் தான்

0
3901
Virat Kohli Steps down as Indian Test Captain

கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதில் விராட் கோலிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இந்திய மண்ணில் மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள் என அயல்நாடுகளில் இவரது தலைமையிலான இந்திய அணி பல்வேறு வெற்றிகளை சந்தித்து இருக்கிறது.

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 40 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார். அதில் 16 வெற்றிகள் அயல் மண்ணில் கிடைத்த வெற்றிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக மட்டுமின்றி ஒரு வீரராக மிக சிறப்பாக இந்திய அணிக்காக விளையாடிய பெருமையும் அவருக்கு உள்ளது. சமீபத்தில் இவரது தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது.

தோல்வியை தொடர்ந்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி சில நிமிடங்களுக்கு முன்னர் அதிர்ச்சி அளித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை பெற்றதிலிருந்து வெளிவராத இந்திய ரசிகர்களுக்கு, இது கூடுதல் மன வேதனையை கொடுத்துள்ளது.

இந்திய அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் பதவியேற்க வாய்ப்பு

தற்போது வெளி வந்த தகவலின் படி இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு கேஎல் ராகுல் பெயர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கே எல் ராகுலே தலைமை ஏற்று விளையாடினார்.

இளம் வயதான கேஎல் ராகுல் அனைத்துவித கிரிக்கெட் பார்மேட்டிலும் சிறப்பாக விளையாடும் திறமை படைத்தவர். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு சரியான தேர்வாக ராகுல் இருப்பார் என்று இந்திய ரசிகர்கள் சிலரும் தற்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். எனவே கூடிய விரைவில் பிசிசிஐ தரப்பில் இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

நாற்பத்தி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் இதுவரை 2 ஆயிரத்து 542 ரன்கள் குவித்துள்ளார் . டெஸ்ட் போட்டியில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 35.38 என்பதும் குறிப்பிடத்தக்கது.தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் நாடுகளில் இந்த 21ஆம் நூற்றாண்டில் அதிக சதங்கள் குவித்துள்ள இந்திய பேட்ஸ்மேன் என்கிற பெருமையும் கே எல் ராகுலுக்கு உண்டு.
எனவே கேஎல் ராகுல் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டால் நல்ல முடிவாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.