” அன்று இரவு விராட் கோலி தூங்காமல் அழுது கொண்டே இருந்தார் ” – நினைவு கூறும் கோலியின் முன்னாள் சக வீரர் பிரதீப் சங்வான்

0
394
Virat Kohli crying

இந்திய கிரிக்கெட்டில் சச்சினின் ஓய்வுக்குப் பிறகு, இந்திய அணிக்காக அடுத்த பத்தாண்டுகள் அவரது இடத்தில் இருந்து சீராக ரன் கொண்டுவந்து தருவது யாரென்று கேள்வி இருந்த நேரத்தில்தான், 2008ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அன்டர் 19 அணியை வழிநடத்தி கோப்பையையும் வென்ற டெல்லி வீரர் விராட்கோலியை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்தது!

இந்திய அணிக்குத் தேர்வான அவர் தன்னை நிரூபிக்க அதிக ஆட்டங்களை எடுத்துக்கொள்ளவெல்லாம் இல்லை. அவரது பேட்டிலிருந்து ரன்கள் சீராக வர ஆரம்பித்ததோடு, அரைசதங்களை விட சதங்கள் மளமளவென்று கொட்ட ஆரம்பித்தது. இலக்கை எதிரணி தந்துவிட்டால், அதற்குப் பிறகு விராட்கோலி இலக்கை துரத்துவதே தனி அழகோடும், துல்லியமான திட்டத்தோடும் இருக்கும். எதிரணியை எந்த ஐந்து ஓவர்களிலும் ஆட்டத்தில் நிமிரவே விடமாட்டார். இதனால்தான் அவரை ரன் மெசின் என்றும் சேஸிங் மாஸ்டர் என்றும் அழைக்கிறார்கள்.

- Advertisement -

2008 ஆம் ஆண்டு அன்டர் 19 உலகக்கோப்பையை விராட்கோலி வென்று வந்த பொழுதுதான், ipl முதல் சீசனிற்கான ஏலமும் நடந்தது. அப்போது தான் எப்படியும் தன் மாநில அணியான டெல்லி டேர் டெவில்ஸ் அணியால் வாங்கப்படுவோம் என்று விராட்கோலி பெரிதும் நம்பியிருந்தார். ஆனால் அவரை டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கவில்லை. அவருக்குப் பதிலாக அவரின் மாநிலத்தைச் சேர்ந்த, அவரின் தலைமையின் கீழ் அன்டர் 19 இந்திய அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பிரதிப் சங்வானைத்தான் டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது. விராட்கோலியின் டீன் ஏஜ் வயதில் அவருடன் கிரிக்கெட் விளையாடி பிரதீப் சங்வான், அப்போது நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் “விராட் கோலி டிரஸ்ஸிங் ரூமில் எப்போதும் சேட்டை செய்துகொண்டே இருப்பார். இந்தச் சம்பவம் நடந்தபொழுது நாங்கள் பஞ்சாபில் அன்டர் 17 மேட்ச் விளையாடிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது விராட்கோலி 2-3 ஆட்டங்களில் சரியாக ரன் அடிக்கவில்லை. ஆனால் அந்தத் தொடரின் மற்ற மேட்ச்களில் நிறைய ரன்ஸ் அடித்திருந்தார். இதை வைத்து, அவர் அடுத்த ஆட்டத்தில் இருந்து தூக்குவதாக, அவரை பிராங்க் செய்யலாம் என்று அஜித் ஸார் கூறினார். இதன்படியே அடுத்த நாள் டீம் மீட்டிங்கில், அடுத்த மேட்ச்கான லிஸ்டில் ஸார் விராட்கோலி பெயரைப் படிக்கவில்லை” என்றவர்.

மேலும் தொடர்ந்து கூறினார் “அன்றைய இரவு முழுவதும் விராட் அழுதுக்கொண்டே இருந்தார் தூங்கவே இல்லை. அஜித் ஸாருக்கு போன் செய்து, நான் முன்ன மேட்ச்களில் 200, 250 என பெரிய ஸ்கோர் அடித்திருக்கிறேன். இதையெல்லாம் வைத்து நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். என்னை அணியிலிருந்து நீக்கியது தவறு என்றெல்லாம் கூறினார். இது மட்டும் இல்லாமல் அவருடைய சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஸாரிடமும் போன் செய்து அழுதார்” என்று கூறினார்.

- Advertisement -

இதற்கு மேலும் கூறிய அவர் “அடுத்து என்னிடம் வந்த விராட்கோலி, சங்வான் நான் என்ன தவறு செய்தேன்? ஏன் இப்படி? இது நியாயமா? என்று கேட்டார். நான் இதெல்லாம் தப்புதான் என்று கூறினேன். மேலும் அவரை தூங்கசொல்ல, அவரோ, நான் விளையாடாத போது தூங்கி என்ன வரப்போகிறது? நான் தூங்க விரும்பவில்லை என்று கூறி உடைந்துபோய்விட்டார். இதற்கு மேல் போதுமென்று நினைத்து நான் அவரிடம் இது பிராங்க் இது விளையாட்டுக்கு என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்” என்று பிரதீப் சங்வான் நினைவு கூர்ந்தார்!