ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ நீக்க வாய்ப்பு – டேனிஷ் கனேரியா

0
301
Virat Kohli and Danish Kaneria

இந்திய அணியின் ரன் மெசின் விராட் கோலி எப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய பேட்டிங் பார்ம் சரிவில் இருக்கிறார். 2019ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு அவரது பேட்டிங்கில் சதங்கள் வராததோடு, அவர் பேட்டிங் பார்மும் சரிந்துகொண்டே வந்திருக்கிறது. அவரிடமிருந்து சதங்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பியவர்கள், அடுத்து அவரிடமிருந்து சராசரியான ரன்கள் எங்கே? என்று கேட்கும் அளவிற்கு, அவரது பேட்டிங் பார்ம் சரிந்திருக்கிறது!

கடந்த ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி யுஏஇ-யில் நடந்த உலகக்கோப்பையில் முதல் சுற்றோடு தோற்று வெளியேறியதை அடுத்து, இந்திய அணி நிர்வாகம் மிகக் கவனமாக இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கான அணியை அமைப்பதில் இருக்கிறது!

- Advertisement -

இதன் ஒரு பகுதியாக தொடர்ந்து செளத்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்த, வெஸ்ட்இன்டீஸ் என டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஓய்வளிக்கப்பட்டு திரும்பிய விராட் கோலி, இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் 16, 17 ரன்கள் என ஏமாற்றினார். அடுத்து டி20 தொடரிலும் 1, 11 என ஏமாற்றினார்.

இதனையடுத்து விராட் கோலிக்கு ஒரு நீண்ட ஓய்வு அளிக்கப்பட வேண்டுமென எழுந்த கோரிக்கைகளை வைத்து, அவருக்கு வெஸ்ட்இன்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், டி20 தொடரில் பிசிசிஐ ஓய்வளித்தது. அடுத்து ஆகஸ்ட் 18, 20. 22 தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்லும் அணியிலும் விராட் கோலி விலக்கப்பட்டு ஓய்வளிக்கப்பட்டு வருகிறார். விராட்கோலி யுஏஇ-யில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது!

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா இதுபற்றி கூறியிருக்கிறார். அவர் கூறும்பொழுது “விராட்கோலி ஜிம்பாப்வே உடனான ஒருநாள் தொடரில் விளையாடி இருக்க வேண்டும். அவர் முக்கியப் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டுமென பிசிசிஐ நினைக்கிறதா? ஆனால் நேராக முக்கியப் போட்டிகளுக்கு வந்து அதில் அவர் தோல்வியடைந்தால், மீண்டும் அவரின் பேட்டிங் குறைபாடுகள் பற்றிப் பேசப்படும். இது விராட்கோலிக்கு செய்யப்படும் அநீதி” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் “விராட்கோலியை எப்படிக் கையாள வேண்டுமென்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். முழு வெஸ்ட்இன்டீஸ் தொடர்களிலும் அவர் ஓய்வில் இருந்தபோது, அவர் கட்டாயம் ஜிம்பப்வே தொடரில் விளையாடி இருக்க வேண்டும். 50 ஓவர் போட்டிகளில் அவர் தனது பார்மை கண்டிருக்கலாம். பின்னர் ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடி இருக்கலாம். இப்போது அவரை ஆசியக்கோப்பை தொடரிலும் கைவிடுவார்கள் என்றே தோன்றுகிறது” எனக் கூறினார்!