ஒரு சதம் ; பல சாதனைகள்; அதிரவைத்த விராட் கோலி!

0
490
Virat kohli

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி இழந்திருந்தாலும், இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்தது, உலகக் கோப்பையை வென்றதற்கு சமமான மகிழ்ச்சி அலைகளை இந்திய ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அதன் நிர்வாகம், இந்திய முன்னாள் வீரர்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது. அந்த அளவிற்கு விராட் கோலியின் சதம் முக்கியமானது. அந்த அளவிற்கு விராட் கோலி முக்கியமானவர்!

இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 200 ஸ்டிரைக் ரேட்டில் 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர் 6 பவுண்டரி அடக்கம். எந்தவிதமான நவீன கிரிக்கெட் ஷாட்களும் இல்லாமல், வழக்கமான மரபான கிரிக்கெட் ஷாட்களை மட்டுமே ஆடி 200 ஸ்டிரைக் ரேட்டில் உலகத்தில் எந்த வீரரும் டி20 போட்டியில் சதம் அடித்து இருக்க முடியாது. ஆனால் அதை இன்று விராட்கோலி செய்திருக்கிறார். அதிலும் ஸ்வீப் ஷாட் ஒன்றே ஒன்றுதான் விளையாடினார். பழைய விராட்கோலி மொத்தமாய் திரும்பி வந்தது தெரிந்தது.

- Advertisement -

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் கடைசியாக விராட்கோலி இடமிருந்து சதம் வந்திருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு பக்கமாக அவரிடம் இருந்து சதம் வரவில்லை. அவரது ரசிகர்களாக இல்லாதவர்கள்கூட அவர் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று எதிர்பார்த்தனர். பாகிஸ்தான் வீரர்கள் வரை அவர் மீண்டும் வரவேண்டும் என்று ஆசைப்பட்டனர். இன்றைய போட்டியில் அது நடந்திருக்கிறது.

இன்று விராட் கோலி அடித்த சதம் அவரது 71வது சதமாகும். இந்த 71 ஆவது சதத்தை 522 இன்னிங்ஸ்களில் கொண்டு வந்திருக்கிறார். இதுதான் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஆகும். இதற்கடுத்து சச்சின் 523 இன்னிங்ஸ்களில் இருக்கிறார். இதற்கடுத்து ரிக்கி பாண்டிங் ரொம்ப தொலைவாக 652 இன்னிங்ஸ்களில் இருக்கிறார்.

இந்த சதத்தின் மூலம் அதிவேகமாக சர்வதேச போட்டிகளில் 24,000 ரன்களை குறைந்த போட்டிகளில் கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி 523 இன்னிங்ஸ்களில் படைத்திருக்கிறார். இதற்கடுத்து சச்சின் 543, ரிக்கி பாண்டிங் 565, ஜாக் காலிஸ் 573, குமார் சங்ககரா 590, ராகுல் டிராவிட் 596, ஜெயவர்தனே 668 ஆகியோர் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த சதத்தின் மூலம் விராட்கோலி டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். இதற்கு முன்னால் ரோகித் சர்மா 118, சூரியகுமார் 117, ரோகித் சர்மா 111 ஆகியோர் இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் மொத்தமாக ஐபிஎல் வரை சேர்த்து ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரோடு 6 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இணைகிறார்!