விராட் கோலியைப் பதவி விலகச் சொல்லி நாங்கள் வற்புறுத்தவில்லை – பிசிசிஐ அளித்துள்ள விளக்கம்

0
608
Sourav Ganguly and Virat Kohli

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் விராட் கோலி. கடந்த 2014ஆம் ஆண்டு வந்த ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனி ஓய்வை அறிவித்ததும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக கோலி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது தரவரிசையில் 7வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் விராட் கோலியின் தலைமை பண்பு. தோனியின் அமைதியான கேப்டன்சி முறையிலிருந்து ஆக்ரோஷமான கேப்டன்சியை கோலி இந்திய அணிக்கு புகுத்தியுள்ளார். இதன் காரணமாக இந்திய அணி பல முக்கிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். தென் ஆப்ரிக்க தொடரில் இந்திய அணி தோல்வி பெற்றதும் இந்த முடிவை வெளியிட்டுள்ளார் கோலி. இந்த முடிவை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கோலி வெளியிட்டுள்ளார். இதுவரை அறுபத்தி எட்டு போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள கோலி 40 போட்டிகளில் இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.

- Advertisement -

அதேபோல 17 போட்டிகளில் தோல்வியையும் 11 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளன. ஏற்கனவே டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த கோலியை, ஒருநாள் போட்டிகளில் இருந்தும் பிசிசிஐ நீக்கியது. தற்போது திடீரென்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பதவியில் இருக்க போவதில்லை என்று அறிவித்துள்ளதால் இதற்கும் பின்னணியில் பிசிசிஐ இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்த வண்ணம் உள்ளது.

ஆனால் இதை தற்போது பிசிசிஐ பொருளாளர் மறுத்து பேசியுள்ளார். விராட் கோலி பதவி விலக வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க வில்லை என்றும் அது அவரின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறியுள்ளார். கோலியின் இந்த முடிவை தாங்கள் மதிப்பதாகவும், இருந்தாலும் இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு கோலியே கேப்டனாக தொடர்ந்திருக்கலாம் என்று அவர் பேசியுள்ளார். கோலிக்கு பிறகு அடுத்த கேப்டனாக யார் வரப் போகிறார்கள் என்பதை இன்னமும் பிசிசிஐ தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை. துணை கேப்டனாக இருந்து வரும் ரோகித் அல்லது இந்த தென்ஆப்பிரிக்க தொடரின் ஒரு போட்டிக்கு கேப்டனாக இருந்த ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.