விராட் கோலி அதிரடி சதம் ;
முடிவுக்கு வந்தது மூன்றாண்டு தவம்!

0
119
Virat kohli

ஆசியக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடரில் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் ஆப்கானிஸ்தான், இந்திய அணிகள் மோதி வருகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே இறுதி சுற்று வாய்ப்பை இழந்து இருக்கின்றன. ஆனாலும் இந்தப் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளை உள்ளடக்கி இருக்கிறது. இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது சதத்தை பதிவு செய்து இருக்கிறார். இன்று அவரது 71வது சதம் மற்றும் டி20 போட்டியில் முதல் சதம் வந்திருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அதே ஆப்கானிஸ்தான் அணியே தொடர்ந்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணிக்கு கேஎல் ராகுல் தலைமை தாங்கினார்.

இந்த ஆட்டத்தில் கேஎல் ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களம் புகுந்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து அசத்தினர். இதையடுத்து 41 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரி என 62 ரன்கள் குவித்து ராகுல் ஆட்டமிழந்தார். இதையடுத்து விளையாட வந்த சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்சர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதற்கடுத்து விராட் கோலியுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இதற்கடுத்து விராட் கோலியின் பேட்டிங் சூடு பிடித்தது. மைதானத்தின் நாலாபுறங்களிலும் ஆப்கானித்தான் பந்துவீச்சாளர்களுக்கு வேடிக்கை காட்டினார். ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் வரை விட்டுவைக்காமல் விரட்டி விரட்டி அடித்தார்.

தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சிக்ஸர் அடித்து தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தார். மேலும் இது அவரது சர்வதேச 71 ஆவது சதமாகும். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் விராட் கோலி கடைசியாக சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது இப்பொழுதுதான் அவரிடம் இருந்து சதம் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடங்க இருக்கும் நிலையில் பழைய விராட் கோலி திரும்ப வந்து இருப்பது இந்திய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சதம் அடித்த விராட் கோலி அத்தோடு நிற்காமல் தொடர்ந்து அதிரடியில் ஈடுபட்டார். பந்துகள் மேலும் மேலும் எல்லைக்கோட்டை தரையிலும் வானிலும் கடந்து கொண்டிருந்தன. முடிவில் விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். ஸ்ட்ரைக்ரேட் 200. இதில் 6 சிக்சர்கள் 12 பவுண்டரிகள் அடக்கம். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது.