விராட் கோலி சூரியகுமார் அபார ஆட்டம்; திக் திக் ஆட்டத்தில் தொடரை வென்றது இந்திய அணி!

0
1053
Virat sky

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இதன் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமனில் இருந்தது.

இன்று தொடர் யாருக்கு என்று தீர்மானிக்கும் மூன்றாவது தொடரின் கடைசி போட்டி ஹைதராபாத் நகரின் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரிஷப் பண்ட் வெளியே போய் புவனேஸ்வர் குமார் உள்ளே வந்து இருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை துவங்க வந்த ஜோடியில் கேப்டன் ஆரோன் பின்ச் சீக்கிரத்தில் வெளியேறினார். ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை சிதைத்து நொறுக்கி விட்டார். அவர் வெறும் இருபத்தி ஒரு பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்து அசத்தினார்.

ஆனால் அதற்கு அடுத்து இந்திய பவுலர்கள் சுதாரித்து ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தினர். ஆனால் இறுதி நேரத்தில் இளம் வீரர் டேவிட் தனது முதல் சர்வதேச அரை சதத்தை அடித்து ஆஸ்திரேலிய அணியை நெருக்கடியிலிருந்து காப்பாற்றினார். அவர் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 2 7 பந்தில் 54 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 186 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு களம் கண்ட விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு மிகச் சிறப்பான பதிலடியை தந்தார்கள். வழக்கம்போல் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதில் தலா ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடக்கம்.

இன்னொரு முனையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் தனது அரை சதத்தை அடித்தார். அவர் 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடக்கம். இறுதியில் 19.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதை அடுத்து வருகின்ற புதன்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணியுடன் திருவனந்தபுரத்தில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி மோத இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் இருக்கிறது!