நானும் விராட் கோலியும் டீமை வேற மாதிரி வைச்சிருந்தோம்; ஆனா இப்ப? – இந்திய அணி நிர்வாகத்தை தாக்கிய ரவிசாஸ்திரி!

0
447
Ravi Shasthri

ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணிக்கு முன்பு விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணி இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான கூட்டணி. காரணம், இவர்கள் ஆளுமையின் காலத்தில்தான் இந்திய டெஸ்ட் அணி பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக சார்ந்திருந்தது. வேகத்திற்கு ஒத்துழைக்கும் வெளிநாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்கள்!

விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணி ஆக்ரோஷம் மிக்க அதே சமயத்தில் உடற்தகுதியில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது, செயல்பாட்டில் வீரர்கள் அம்பு போல் இருக்க அத்தனையையும் செய்தார்கள். ஒரு வீரர் ஓரளவுக்கு நல்ல பார்மில் இருந்தாலும் அவர் உடற்பகுதியில் தேறவில்லை என்றால் அணிக்குள் வரமுடியாது. இப்படியான ஒரு நிலை இவர்கள் தலைமையின் கீழ்தான் உருவானது.

- Advertisement -

இந்தக் கூட்டணியின் காலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலம் என்று கூறலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்நாட்டில் புலியாகவும் வெளிநாட்டில் எலியாகவும் இருந்த இந்திய அணியின் செயல்பாடு, எல்லா இடங்களிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புலிப்பாய்ச்சல் போட்டது இவர்களால்தான். மிகக் குறிப்பாக இன்று உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ராவை, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சொல்லிவைத்து கொண்டுவந்தவர் ரவி சாஸ்திரிதான்.

தற்போது ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணியின் கீழ் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்கள் போட்டியைத் தைரியமாக அணுகும் முறையில் மாற்றம் வந்திருக்கிறது. ஆனால் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன் குவித்தாலும், அதை வைத்துக் கொண்டு பந்துவீச்சாளர்கள் எதிரணியைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. மேலும் ஃபீல்டிங் படுமோசமாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக எதிரணி ஆறுமுறை 200 ரன்களை தாண்டி அடித்திருக்கிறது. இதற்கு வீரர்கள் களத்தில் பீல்டிங்கில் கோட்டை விடுவதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும்பொழுது ” இந்திய வீரர்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல அவர்கள் கோடீஸ்வரர்கள். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு மனநிலை இருக்கும். இங்கு மனித மேலாண்மை மிக மிக அவசியம். அதனால் ஒவ்வொரு தனிப்பட்ட வீரரையும் எப்படி அணுகுவது என்பது முக்கியமானது? இந்த அறிவை அனுபவத்தை எல்லாம் சந்தையில் வாங்க முடியாது. நம்மிடம்தான் இதெல்லாம் இருக்க வேண்டும். என்னிடம் இது இருந்தது ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” உடற்தகுதிக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியமானது. என் காலத்தில் உடற்தகுதிக்கு யோ-யோ தேர்வு இருந்தது. அப்பொழுது அதை நிறையப்பேர் கண்டு சிரிக்கவும் விமர்சிக்கவும் செய்தார்கள். தேர்வு ஒருபோதும் தேர்வுக்காக அல்ல. அது வீரர்களின் விழிப்புணர்வுக்கானது. இது வீரர்களிடையே உடற்தகுதியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. அவர்கள் விளையாடிய விதத்தில் மட்டுமல்ல அவர்கள் களத்தில் வேகமாக செயலாற்றிய விதத்திலும். கடந்த சில மாதங்களில் டி20 போட்டியில் நீங்கள் எதிரணியை எத்தனை முறை 200 ரன்களை தாண்ட விட்டீர்கள் என்பது கவலைக்குரிய ஒன்று. இதற்கு பந்துவீச்சாளர்களை மக்கள் குறை கூறுவார்கள். ஆனால் பீல்டிங் சரி இல்லாததும் இதற்கு ஒரு மிக முக்கியக் காரணம்” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.