19வது ஓவரில் நானும் ஹர்திக் பண்டியாவும் என்ன பேசிக்கொண்டோம்? – திக் திக் நிமிடங்களை விவரித்த விராட் கோலி!

0
18395

19வது ஓவரின்போது நானும் ஹர்திக் பாண்டியாவும் என்ன பேசிக் கொண்டோம் என்பதை மனம் திறந்து பேசி உள்ளார் விராட் கோலி.

விறுவிறுப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இதயத்துடிப்பை சற்றும் குறைக்காமல் கடைசி ஓவர் வரை போட்டியை இரு அணிகளும் எடுத்துச் சென்றன.

- Advertisement -

இந்தியாவுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயத்திருந்தது பாகிஸ்தான் அணி. 10 ஓவர்களில் இந்திய அணி 60 ரன்களுக்கும் குறைவாகவே அடித்திருந்தது.

அதன் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் போட்டியின் வேகத்தை அதிகரிக்க பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசத் துவங்கினர். கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற 31 ரன்கள் தேவைப்பட்டது.

நல்ல பார்மில் இருந்த ஹாரிஸ் ரவுப் 19வது ஓவரை வீசினார். முதல் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே வந்திருந்தது. கடைசி இரண்டு பந்துகளில் இரண்டையும் பவுண்டரிகளாக அடித்தாக வேண்டும் என்று இருந்த சூழலில், விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசி 15 ரன்கள் ஓவராக மாற்றினார்.

- Advertisement -

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் துரதிஷ்டவசமாக ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார். அதன் பிறகு விராட் கோலி பார்த்துக்கொண்டார். இறுதியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் ஹார்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். அப்படி அவர்களுக்குள் என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக இருந்தனர். இதை சரியாக புரிந்து கொண்டு அவர்களிடம் பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறது பிசிசிஐ.

“இதுபோன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளை நிறைய விளையாடி இருக்கிறேன். ஆனால் இந்த போட்டி மிகுந்த அழுத்தமாக இருந்தது. ஏனெனில் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு எதிர்பார்ப்பும் மைதானத்தில் நிலவிய கரகோசமும் தான். ஆனால் ஹர்திக் பாண்டியா என்னிடம் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்.

நவாஸுக்கு ஒரு ஓவர் இருக்கிறது. அதில் குறைந்தது மூன்று அல்லது நான்கு சிக்ஸர்கள் அடித்து விடலாம் என்றார். ஆனால் அவரை கடைசி ஓவர் வரை வைத்திருந்தனர். அப்போது நான் 19வது ஓவரை அடிக்க முயற்சிப்போம் என முடிவெடுத்தேன். அதற்கு ஹார்திக் ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகு தான் நான் நிச்சயம் அடித்தாக வேண்டும், 10 ரன்களுக்கும் அதிகமாக அந்த ஓவரில் வந்தாக வேண்டும் என்று நினைத்தேன்.” என்றார்.

உடனடியாக பேசிய ஹர்திக் பாண்டியா, “19 ஓவரில் விராட் கோலி அடித்த அந்த இரண்டு சிக்சர்களை என்னால் என் கிரிக்கெட் வாழ்வு முடியும்வரை மறக்க முடியாது. நான் எண்ணற்ற பல சிக்ஸர்களை அடித்து இருக்கிறேன். ஆனால் அந்த இரண்டு சிக்ஸர் நான் மிக நெருக்கமாக பார்த்தேன் மற்றவர்களை விட. நன்றாக அந்த அழுத்தத்தை உணர முடிந்தது. வேறு எவராலும் அப்படி ஒரு தருணத்தில் அதுபோன்ற பந்துவீச்சாளரை இரண்டு சிக்ஸர்கள் அடித்திருக்க முடியாது. அது கோலியால் மட்டும் தான் முடியும்.” என்றார்.