வீடியோ ; ஸ்டாய்னிஸ் சாதனை அரைசதம் ; இலங்கையை எளிதாய் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

0
993
Aus vs Sl

இன்று 8வது டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை பெர்த் மைதானத்தில் சந்தித்தது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வி கண்டு இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு இந்த போட்டியில் வாழ்வா சாவா போட்டி ஆகும்.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் குசல் மெண்டிஸ் சீக்கிரத்தில் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த நிசாங்கா 40, தனஞ்சய டி சில்வா 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். கடைசி நேரத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய அசலங்க 25 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 157 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எளிமையாக வெல்லும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி மிகக் கடுமையாக தடுமாறியது. டேவிட் வார்னர் 11 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணிக்கு 7.2 ஓவரில் தான் முதல் பவுண்டரியே வந்தது. அடுத்து மிச்சல் மார்ஸ் 18 ரன்களில் வெளியேறினார்.

இதுவரை ஆட்டம் யார் பக்கம் என்று தெரியாத நிலையில் அதற்கு அடுத்து வந்த மேக்ஸ்வெல் இரண்டு பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 12 பந்துகளில் 23 ரன்கள் அடிக்க ஆட்டம் அப்படியே ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. ஆனால் இதற்கு அடுத்து களத்திற்கு வந்த ஸ்டாய்னிஸ் மொத்த ஆட்டத்தையும் அப்படியே கொத்தாக ஆஸ்திரேலியா பக்கம் கொண்டு வந்துவிட்டார். 17 பந்துகளில் அரைசதம் அடித்து, டி20 உலகக் கோப்பையில் அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டி20 உலக கோப்பையில் யுவராஜ் சிங் வெறும் 12 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தது சாதனையாக இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மொத்தம் 18 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களுடன் 59 ரன்கள் குவித்து 16.3 ஓவர்களில் இலக்கை எட்ட வைத்து ஆஸ்திரேலிய அணியை முதல் வெற்றியை பெற வைத்தார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.