வீடியோ; கடலைப் பார்த்து பந்தை தூக்கி அடித்த ரோமன் பவல்; அதிர்ச்சியாகி நின்ற சக பேட்ஸ்மேன்!

0
60423
Roman Powel

எட்டாவது டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீஸ் ஜிம்பாப்வே அணிகள் மோதிய மிக முக்கியமான போட்டி ஒன்று நடந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும். இந்த போட்டியில் தோற்றால் உலகக் கோப்பையின் பிரதான சுற்றில் விளையாடாமல் வீட்டிற்கு செல்ல வேண்டியதுதான்!

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்வது என தீர்மானித்தது. துவக்க ஜோடி கொஞ்சம் நின்று ஏதோ விளையாட, அடுத்து வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாய் சொதப்பி, வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பையை விளையாடாமல் வெளியே செல்ல அனைத்து வேலையையும் மிகச்சரியாக செய்து வைத்தார்கள்.

இந்த நிலையில் அணியின் துணை கேப்டன் ரோமன் பவல் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அஹேல் ஹூசைன் இருவரும் சேர்ந்து கொஞ்சம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 153 என்ற ரன்களுக்கு கொண்டு சென்றார்கள்.

அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி ஆட்டத்தின் போக்கைப் புரிந்து கொள்ளாமல் விளையாடியதால் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் தோல்வியைத் தழுவியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 4 ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.

இந்தப் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்கையில் கடைசி ஓவரில் ரோமன் பவல் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் வீசிய ஒரு பந்தை ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடிக்க, பந்து உயர சென்றதோடு, தூரமாகவும் சென்று, கடல் இருக்கும் திசை நோக்கி போய் மைதானத்தை விட்டு வெளியே விழுந்தது. இவர் அடித்த இந்த ஷாட்டை பார்த்து உடன் விளையாடிய சக பேட்ஸ்மேன் அஹேல் ஹூசைன் அதிர்ச்சியாகி பந்தை பார்த்தார். அந்த அளவிற்கு அவர் ஆடிய விதம் இருந்தது. இந்த சிக்சர் அடிக்கப்பட்ட தொலைவு 104 மீட்டராகும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை மறுநாள் தகுதிச்சுற்று கடைசிப் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்லும் பட்சத்தில் அடுத்த பிரதான சுற்றுக்கு நுழையும். தோற்றால் நாடு திரும்ப வேண்டியதுதான்!