வீடியோ ; ரன் அவுட்டில் தப்பிக்க வித்தியாசமாக ஓடிய நியூசிலாந்து வீரர்!

0
10033
Nz vs Sl

ஆஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து இலங்கை அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டியில் ஜெயிக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அரை இறுதிக்கு செல்வது ஏறக்குறைய உறுதியாகும். இலங்கை அணி வென்றால் தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும்!

இந்த போட்டிக்கான டாசில் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் 15 ரன்களுக்கு தனது முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் தற்போது போட்டி நடைபெற்று வரும் கிட்னி மைதானம்தான் பேட்டிங் செய்ய கொஞ்சம் சாதகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து கிளன் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிச்சல் இருவரும் சேர்ந்து நியூசிலாந்து அணியை கொஞ்சம் கொஞ்சமாக நிமிர வைத்தார்கள். இந்த ஜோடி 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, டாரில் மிச்சல் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து தனது ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்திய கிளன் பிலிப்ஸ் 61 பந்துகளில் சதம் அடித்து, இறுதியில் 64 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 167 ரன்கள் எடுத்தது.

இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர் முனையில் நின்ற பிலிப்ஸ், ரன் எடுக்க ஓடுவதற்காக, ஒரு ஓட்டப்பந்தய வீரர் ஓடத் துவங்குவதற்கு முன் அமர்ந்திருக்கும் முறையில், கிரீசுக்குள் கால் வைத்து தரையில் பேட்டை ஊன்றி இருந்து, பந்துவீச்சாளர் பந்து வீசிய நொடியில், ஓட்டப் பந்தய வீரர் கிளம்பி ஓடுவது போல் ஓடினார். இவரது இந்த ஓட்டம் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதே வேளையில் இப்படி ஓடுவதால் அவருக்கு கொஞ்சம் நேரமும் மீதியாவது போல் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஐசிசி பந்துவீச்சாளர் முனையில் பந்துவீச்சாளர் பந்து வீசும் முன்பு கிரீசை தாண்டி செல்லும் பேட்ஸ்மேனை பந்துவீச்சாளர் ரன் அவுட் செய்வது சரியான ஒன்று எனவும், அதை ரன் அவுட் என அங்கீகரிப்பதாகச் சட்டத்தை மாற்றி இருந்தது. அதிலிருந்து பந்துவீச்சாளர்கள் இப்படியான ரன் அவுட்டை செய்து வருகிறார்கள். இதனால் பிலிப்ஸ் ஒரு ஓட்டப் பந்தய வீரர் போல் கிரீசுக்குள் இருந்து, ரன் அவுட் செய்ய வாய்ப்பு தராமல் ஓடுவது புத்திசாலித்தனமாக தெரிகிறது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!