வீடியோ; ஒற்றைக் கையால் ஆட்டத்தை மாற்றிய கே.எல்.ராகுல்!

0
29597
K. L. Rahul

இன்று எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிய போட்டியில் இரண்டாம் பகுதி ஆரம்பித்து சிறிது நேரத்தில், இந்திய அணி ரசிகர்களும், இவ்வளவு ஏன் இந்திய அணியினர் கூட, “நாம் அடுத்த சுற்றில் இருப்போமா? இருக்க மாட்டோமா?” என்ற சந்தேகத்தில் விழும் அளவிற்கு, பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸும், மழையும் சேர்ந்து பாடாய்படுத்தி விட்டது என்று கூறலாம்!

முதலில் பேட் செய்து கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரது சிறப்பான அரை சதங்களால் இந்திய அணி 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயித்தது.

- Advertisement -

இந்திய அணி ரசிகர்கள் மற்றும் இந்திய அணியினர் எப்படியும் இந்த பலவீனமான பங்களாதேஷ் அணியை குறைந்தது ஒரு 150 ரன்கள் உள்ளாவது மடக்கி எளிதாக வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு மிக பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுவோம் என்று நினைத்திருந்தனர்.

ஆனால் இரண்டு கேட்ச் வாய்ப்புகளில் தப்பிப்பிழைத்த பங்களாதேஷ் அணியின் வலது கை துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பேய் ஆட்டம் ஆடி இந்திய அணி ரசிகர்களையும் இந்திய அணியினரையும் பெரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டார்.

நிலைமை ஏற்கனவே மோசமாக இருந்த சூழலில் மழை வேறு வந்து ஆட்டம் தடைப்பட்டு விட்டது. மழையின் போது விக்கெட் இழப்பில்லாமல் ஏழு ஓவர்களுக்கு பங்களாதேஷ் அணி 66 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து ஆட்டம் நடக்காது போனால், பங்களாதேஷ் அணிதான் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டிருக்கும். அதற்குத் தேவையான ரன்களை அவர்கள் அடித்திருந்தார்கள். இப்படி மழையின் காரணமாக லிட்டன் தாஸ் இந்திய ரசிகர்கள் மற்றும் இந்திய அணியினர் மீது உருவாக்கிய அழுத்தத்தை விட பெரிய அழுத்தம் உருவாகிவிட்டது.

- Advertisement -

மீண்டும் போட்டி தொடங்கப்பட்டு நடைபெற்ற ஆட்டத்தின் முதல் ஓவரை அஸ்வின் வீச, அந்த ஓவரின் போது மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் சான்டோ பந்தை தட்டி விட்டு இரண்டு ரன்கள் ஓட, இரண்டாவது ரன்னில் தட்டு தடுமாறி பந்துவீச்சாளர் முனைக்கு வந்த லிட்டன் தாஸை, 30 அடிக்கும் மேல் தூரத்தில் இருந்து கே எல் ராகுல் மிகச் சிறப்பாக ஸ்டம்ப் நோக்கி குறி தவறாது அடித்து, அவரை அவுட் ஆக்கினார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

லிட்டன் தாஸ் அவுட் ஆன பிறகு அடுத்தடுத்து பங்களாதேஷ் விக்கெட்டுகள் சரிய இந்திய அணி இறுதியாக வெறும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி வந்த லிட்டன் தாஸை, கேஎல் ராகுல் அற்புதமான த்ரோ எறிந்து ரன் அவுட் செய்திருக்காவிட்டால், இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்று இருக்க அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை தோற்று இருந்தால் இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறவும் வாய்ப்புகள் இருந்தது. ஆனால் ஒற்றை கையால் இந்திய அணியின் விதியை மாற்றி எழுதியிருக்கிறார் கே.எல்.ராகுல்!