வீடியோ; ஆஸி வீரர்களோடு அரங்கமே எழுந்து கைதட்டிய அயர்லாந்து வீரரின் அபார பீல்டிங்!

0
9515
Aus vs Ire

நடப்பு எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் 1ல் ஆஸ்திரேலியா அயர்லாந்து அணியை பிரிஸ்பேன் மைதானத்தில் எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெல்ல வேண்டும் என்பதை தாண்டி நல்ல ரன் ரேட்டில் வெல்ல வேண்டும் என்பது முக்கியம்!

இந்த நிலையில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக முதலில் பீல்டிங் செய்வது என முடிவு செய்தது. ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்த ஆட்டத்திலும் ஏமாற்றினார்.

- Advertisement -

ஆனாலும் இன்னொரு முனையில் விளையாடிய கேப்டன் ஆரோன் பின்ச் பொறுப்பை உணர்ந்து முதலில் கொஞ்சம் பொறுமையாக விளையாடி பின்பு அதிரடியாக அணுகி அணிக்கு ரன்களை கொண்டு வந்தார். இவர் 44 பந்துகளில் 63 ரன்களை 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் எடுத்தார்.

ஆஸ்திரேலியா அணியில் மிச்சல் மார்ஸ் 28, மேக்ஸ்வெல் 13, ஸ்டாய்னிஷ் 35, டிம் டேவிட் 15* ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும் பொழுது ஆஸ்திரேலியா அணி வீரர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சம்பவத்தை ஒரு அயர்லாந்து வீரர் நிகழ்த்தி காட்டினார். ஆஸ்திரேலியா வீரர் ஸ்டாய்னிஷ் நேராக தூக்கி அடித்த ஒரு பந்து, வானத்தை நோக்கி எழுந்து, பவுண்டரி எல்லைக்கு அருகில் வந்து விழ இருந்தது, இந்த நேரத்தில் அயர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாரி மெஹர்த்தி பின்னோக்கி டைவ் அடித்து, பந்தை கேட்ச் செய்து, ஆனால் அந்த வேகத்தில் நிலைபெற முடியாமல், பந்தை தூக்கி உள்ளே எறிந்து விட்டு, அப்படியே காற்றில் பவுண்டரி எல்லைக்கு வெளியே விழுந்தார்.

- Advertisement -

இதை பவுண்டரி எல்லைக்கு அருகில் இருந்து பார்த்த ஆஸ்திரேலியா வீரர்கள் மேத்யூ வேட் மற்றும் ஆடம் ஜாம்பா இருவரும் கைத்தட்டி பாராட்டினார்கள். இது மட்டும் இல்லாமல் அவரது அபார பீல்டிங் திறமைக்கு ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று கைதட்டியது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய அயர்லாந்து அணி ஆஸ்திரேலியா வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பவர் பிளேவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல ரன் ரேட் கிடைக்கும் பட்சத்தில், அது இங்கிலாந்து அணியைத் தொடரை விட்டு வெளியேற்ற உதவியாக இருக்கும். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்குள் வர காரணமாக அமையும்!