வீடியோ; நூதனமாய் தப்பிக்கும் ஆஸ்திரேலியா; பெனால்டி வாங்காமல் எப்படி தப்பிக்கிறார்கள்?

0
792
Australia

மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் சுவாரசியப்படுத்த அவ்வப்போது புதிய விதிமுறைகள் வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உலகம் ஓடும் வேகத்தை பொறுத்து, மாறும் ரசிகர்களின் மனநிலையை பொறுத்து விதிமுறைகளும் மாறும்.

தற்காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் முடிவு எட்டப்பட்டால்தான் ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்கவும் முடியும் அதேசமயத்தில் தொலைக்காட்சியில் பார்க்க வைக்கவும் முடியும் என்று, டெஸ்ட் போட்டிகளுக்கு ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக முடிவு தெரிகின்ற வகையில் அமைக்கப்படுகிறது. இப்படியான ஆடுகளங்களில் நின்று விளையாடுவது வீண் என்பதால் இருக்கும் வரை சேர்ப்போம் என்று பேட்ஸ்மேன்களும் அடித்து விளையாட ரசிகர்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள் .

அதேபோல் ஒருநாள் போட்டியை சுவாரசியப்படுத்துகிறேன் என்று, இரண்டு முனைகளில் பந்துவீச இரண்டு புதிய பந்துகள், அதேபோல் 11வது ஓவரில் இருந்து 40வது ஓவர் வரை வெளிவட்டத்தில் நான்கு பீடர்கள் மட்டும் என்பது போன்ற புதிய விதிமுறைகள் வந்துள்ளன.

இதேபோல் டி20 கிரிக்கெட் என்பது முழுக்க முழுக்க பரபரப்பு மற்றும் வேகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனால் ஆட்டத்தின் வேகம் எந்த இடத்திலும் தடைபடக் கூடாது என்கின்ற காரணத்தால், ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச வேண்டும் என்று விதிமுறை வந்திருக்கிறது.

ஒருவேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசா விட்டால் அதாவது 18 ஓவரை வீசா விட்டால் மீதமுள்ள இரண்டு ஓவர்களுக்கு ஒரு ஃபீல்டர் வெளி வட்டத்தில் குறைவாக நிற்கவேண்டும். அதாவது நான்கு பீல்டர்கள் மட்டுமே வெளியில் நிற்க முடியும். ஆனால் இறுதி நேரத்தில் அடித்து விளையாடுவது சுலபமாகிவிடும்.

தற்பொழுது இந்த விதிமுறைக்கு தகுந்தவாறு நேரத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு புதிய யுக்தியை கையாண்டு வருகிறது. அது என்னவென்றால் ஆஸ்திரேலிய அணி பந்து வீசும் பொழுது, எதிரணி பவுண்டரி அடித்தால், பந்தை அங்கிருந்து உடனுக்குடன் எடுத்து வீச, ஆட்டத்தில் விளையாடாத ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தை சுற்றி இருக்கிறார்கள். இதனால் நேரம் மிச்சம் படுத்தப்படுகிறது.

இந்தத் தகவலை அந்த அணியின் ஆஷ்டன் அகர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பவுண்டரிகள் அடிக்கப்படும் பொழுதும் பத்து நொடிகள் சேமிக்க முடியும் என்றும் இதனால் கடைசி நேரத்தில் ஏற்படுகின்ற நேர இழப்பை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!