வீடியோ.. 4 பந்தில் 3 சிக்ஸ்.. சூப்பர் கிங்ஸை நொறுக்கி மும்பை இந்தியன்ஸை பைனலுக்கு அனுப்பிய டிம் டேவிட்!

0
1062
Tim David

உலக பிரான்சிஸைஸ் டி20 கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகங்கள்தான் யாரும் எட்ட முடியாத இடத்தில் இருக்கின்றன என்பதை அமெரிக்காவில் வைத்தும் நிரூபித்து இருக்கின்றன!

தற்பொழுது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணி நிர்வாகிகளும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகளை வாங்கி இருக்கின்றன.

- Advertisement -

இந்தத் தொடரில் பிளே ஆப் சுற்றில் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் சீட்டில் ஆர்கஸ் அணியிடம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தது. அதே சமயத்தில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் முதல் எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வென்று இருந்தது.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இன்று இறுதிப் போட்டிக்கான இரண்டாவது எலிமினேட்டர் சுற்றில் மோதிக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இதனால் இந்த தொடரில் அதிகபட்ச எதிர்பார்ப்பை உண்டாக்கக்கூடிய போட்டியாக இந்த போட்டி அமைந்திருந்தது. இந்த இரண்டு அணிகள் எங்கு மோதினாலும் இனி மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிந்திருக்கிறது.

குறிப்பிட்ட இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் பந்து வீச்சு மிக அருமையான முறையில் இருந்தது. இதன் காரணமாக டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கான்வே மட்டும் சுதாரித்து 38 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 18 பந்தில் 36 ரன்கள் எடுத்து சயான் ஜஹாங்கீர் நல்ல துவக்கம் தந்தார். ஆனால் அதற்குப் பிறகு போட்டிக்குள் வந்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை மடக்கி, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, கடைசி ஐந்து ஓவர்களுக்கு 53 ரன்கள் தேவை என்கின்ற நிலையில் வைத்திருந்தது.

அதுவரையில் பொறுமையாக இருந்த அதிரடி வீரர் டிம் டேவிட், 15 வது ஓவரை சான்ட்னர் வீச, அதில் ஒரு சிக்சரை பறக்க விட்டார். இதற்கு அடுத்து 16ஆவது ஓவரை பாகிஸ்தான் பவுலர் முகமது மோசின் வீச வர அந்த ஓவரில் முதல் நான்கு பந்தில் மூன்று சிக்ஸர்கள் அடித்து, ஐந்தாவது பந்தில் விக்கெட்டை கொடுத்து டிம் டேவிட் வெளியேறினார். இதற்கான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிம் டேவிட் விக்கெட்டை கொடுத்து இருந்தாலும், நான்கு பந்தில் மூன்று சிக்ஸர்கள் அடித்த காரணத்தினால் ஆட்டத்தில் இருந்த மொத்த அழுத்தத்தையும் வெளியே எடுத்து மும்பையை வெற்றியை நோக்கி மிக வேகமாக தள்ளிவிட்டார். இதற்குப் பிறகு களத்தில் நின்ற குட்டி ஏபிடி டிவால்ட் பிரிவியஸ் 19 ஓவரில் இலக்கை எட்டி அணியை வெற்றி பெற வைத்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.