சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா இருக்க இந்த வீரருக்கு வாய்ப்பு ஏன்? – வெங்கடேஷ் பிரசாத்

0
2166
Venkatesh prasad

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட்இன்டீஸிற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. முதலில் ஷிகர் தவான் தலைமையில் பங்கேற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என வென்றது!

இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ரோகித் சர்மாவின் தலைமையில் 22 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி, ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அணியில் முதலில் இடம்பெற்ற கே.எல்.ராகுல் கோவிட்டால் பாதிக்கப்பட அவருக்குப் பதிலா சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார்!

நேற்று இந்த டி20 தொடரின் முதல் போட்டி பிரையன் லாரா மைதானத்தில் டிரினிடாட்டில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 64 [44], தினேஷ் கார்த்திக் 41 [19] என ரன்கள் எடுக்க, இருபது ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 191 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய வெஸ்ட்இன்டீஸ் அணியில் எந்த பேட்ஸ்மேன்களும் நிலைக்கவில்லை. அவர்களால் இருபது ஓவர்களின் முடிவில் 122 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது!

இந்தப் போட்டியில் விராட் கோலியின் நம்பர் 3-ல் ஸ்ரேயாஷ் ஐயர் களமிறக்கப்பட்டார். அயர்லாந்துடனான டி20 தொடரில் சதமடித்த தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் நம்பர் 3ல் விளையாடக்கூடிய அளவில் அதிரடி ஆட்டக்காரர்களான இடக்கை இஷான் கிஷான், வலக்கை சஞ்சு சாம்சன் போன்றோரும் அணியில் இருக்கிறார்கள்!

இவர்களைத் தாண்டி நேற்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்ட ஸ்ரேயாஷ் ஐயர் நான்கு பந்தில் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டமிழந்தார். டி20 அணியில் ஸ்ரேயாஷ் ஐயருக்கான இடம் பற்றி முன்பே ஆட்சேபம் தெரிவித்திருந்த, இந்திய அணியின் முன்னாள் மிதவேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், தற்போதும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.

தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் இருக்க ஸ்ரேயாஷ் ஐயருக்கு டி20 ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து அவர் ட்வீட்டில் கூறியுள்ளதாவது “வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து சில வீரர்களுக்கான அழைப்புகள் அமைந்துள்ளது. ஆனால் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, இஷான் கிஷான் இருக்கையில் நம்பர் 3ல் ஸ்ரேயாஷ் ஐயர் இறக்கப்படுவது வினோதமானது. ரோகித், ராகுல், விராட் மூவரும் டாப்ஆர்டரில் இருக்க, ஒரு சமநிலையான அணியை உருவாக்க உழைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்!