இந்தியா வேற ஆஸ்திரேலியா வேற புரிஞ்சுக்கோங்க ; அஷ்வின் ஓபன் டாக்!

0
634
Ashwin

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறி வந்து அதிர்ச்சி அளித்தது!

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. இதற்குப் பிறகு விராட் கோலி முழுவதுமாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்பந்த காலம் முடிந்திருக்க, புதிய கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பெற்றுக்கொண்டார்கள்!

- Advertisement -

இந்தக் கூட்டணி மிகக் குறிப்பாக இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் தைரியமாக விளையாடுவது மற்றும் இளம் வீரர்கள், அணியில் இடம்பெறாமல் இருந்த மூத்த வீரர்கள் ஆகியோர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பது என்பதை கறாராகக் கடைபிடித்தார்கள்.

இந்தக் கூட்டணியின் மொத்த செயல்பாடும் பரிசோதனை முயற்சிகளும், இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையையும், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையையும் மனதில் கொண்டே செய்யப்பட்டது.

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்து இந்திய அணிக்கு வெளியே இருப்பது இந்தக் கூட்டணியின் மொத்த திட்டங்களுக்கும் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியிருக்கிறது. இந்த இரண்டு வீரர்களும் ஆடும் இந்திய அணியில் கட்டாயம் இடம் பெறும் வீரர்கள். இவர்களைக் கொண்டு ஒரு பெரிய திட்டம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இருந்தது. தற்பொழுது உலகக்கோப்பை மிக நெருக்கத்தில் இருக்க இவர்களுக்கு பதிலாக ஒரு குறுகிய காலத்தில் மாற்று வீரர்களை கொண்டு வந்து அவர்களை தயார் செய்ய வேண்டிய நெருக்கடி இந்திய அணி நிர்வாகத்திற்கு வந்தது.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில் இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் இந்திய பந்து வீச்சாளர்களின் இறுதிகட்ட செயல்பாடு மிகவும் மோசமாகவே இருக்கிறது. ரன்களை கட்டற்ற முறையில் வாரிக் கொடுத்து விடுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு அர்த்தம் கிடைப்பதில்லை.

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இதுபற்றி கூறும்பொழுது
” டி20 போட்டிகளிலும், சொந்த நாட்டில் நடக்கும் இரு நாடுகளுக்கு இடையேயான டி20 தொடர்களிலும் நடப்பது என்னவென்று முதலில் பார்ப்போம். மைதானத்தின் எல்லா புறங்களிலும் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் அடிக்கிறார்கள் என்பது உண்மைதான். இந்தியாவில் பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் பவுண்டரி எல்லைகள் மிகவும் பெரியது. இங்கு பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தை செயல்படுத்த ஒரு சிறிய சாதகம் இருக்கிறது ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அஸ்வின்
” இங்குள்ள இந்த நிலைமைகளை புரிந்து கொள்வது அவசியம். இங்கு பந்துவீசும் நீளத்தை மிக தைரியமாக 50-50 என்ற அளவில் வைக்க வேண்டும். இது ஒரு புதிய அனுபவம். இது ஒரு புதிய புத்தகத்தை படிப்பது போல் ஆனது. முதல் பக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான் ” என்றும் தெரிவித்தார்!