தொண்ணூறுகளில் மிக அற்புதமாக இந்திய அணிக்கு விளையாடி, ஆனால் அவ்வளவாக பிரபலமடையாத 5 கிரிக்கெட் வீரர்கள்

0
6609
Sadagoppan Ramesh and Sunil Joshi

தொண்ணூறுகளில் இந்திய கிரிக்கெட் சற்று தடுமாறியது அனைவருக்கும் தெரியும். வெற்றி தோல்வி என மாறி மாறி இந்திய அணி பயணித்துக் கொண்டிருந்தது. இந்திய அணிக்கு ஜாம்பவான் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் போன்ற வீரர்கள் வரத் தொடங்கினார்கள்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 90களில் மிக சிறப்பாக விளையாடி, ஆனால் அவ்வளவாக வெளிச்சத்திற்கு வராத ஒரு சில கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.

5. டெபாசிஸ் மோகன்டி

Debashish Mohanty Indian Cricket

ஒடிசாவில் இருந்து முதல் முறையாக இந்திய அணிக்கு கிரிக்கெட் விளையாட வந்த வீரர் இவர் மட்டுமே. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவருடைய பந்து வீச்சு மிக அற்புதமாக இருந்திருக்கிறது. இந்திய அணிக்காக 1997ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை விளையாடினார்.

துலிப் டிராபியில் இவர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அந்த போட்டியில் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இவர் ஒடிசா அணிக்கு தலைமை பயிற்சியாளராக 2011ம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

4. அபே குருவில்லா

Abey Kuruvilla

6 அடி 5 அங்குலம் என மிக உயரமான வீரர் இவர். கேரளாவை சேர்ந்த இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக களம் இறங்கி தன்னுடைய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னரும் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் குருவில்லா மும்பையில் உள்ள டிஓய் பட்டில் மைதானத்திற்கு அகாடமி இயக்குனராக பணியாற்றினார். அதற்கு பிறகு தற்பொழுது இந்திய அணிக்காக, அண்டர் 17 உலக கோப்பை தொடரின் மேற்பார்வையாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சுனில் ஜோஷி

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் அதிரடி ஆல்ரவுண்டர் வீரருமான இவர் 1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இவர் 1999 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை (10-6-6-5) கைப்பற்றினார். அதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த 10 ஓவர்களில் 6 ஓவர்கள் மெய்டன் ஓவர்கள் என்பதும், அதேசமயம் அந்த 10 ஓவர்களில் அவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் என்பதும் தான்.

தற்பொழுது அவர் ஆண்களுக்கான இந்திய அணி தேர்வு குழுவின், தலைமை தேர்வாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. டோட்டா கணேஷ்

Dodda Ganesh

கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1997 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாட தொடங்கினார். இவருடைய முதல் சர்வதேச விக்கெட் கேரி கிறிஸ்டின் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். அதே சமயம் அவருடைய ஒரே ஒரு நாள் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினார். சமீபத்தில் அவர் கன்னடா பிக் பாஸ் தொடரில் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார், அந்தப் பதவி இறுதியில் ரவி சாஸ்திரிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

1. சடகோபன் ரமேஷ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் இந்திய அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1367 ரன்களும் 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 646 ரன்கள் குவித்திருக்கிறார். சடகோபன் ரமேஷ் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆவார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சில தமிழ் படங்களில் (போட்டா போட்டி மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம்) அவர் நடித்து வந்தார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கிரிக்கெட் சேனலில் வர்ணனையாளராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.