மாறாத பாகிஸ்தான் ; அசால்டாக அடித்த இங்கிலாந்து – டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டி!

0
2865
England

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. ஒருபுறம் 8 அணிகள் தகுதி சுற்று போட்டிகள் விளையாடி வருகின்றன. இன்னொருபுறம் 8 அணிகள் பயிற்சி போட்டிகள் விளையாடி வருகின்றன.

இன்று நியூசிலாந்து-தென்னாப்பிரிக்கா, இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பயிற்சி போட்டியில் மோதிக்கொண்டன. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதற்கு அடுத்து பிரிஸ்பன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு பயிற்சி போட்டியில் மோதின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியில் இந்த ஆட்டத்தில் கேப்டன் பாபர் அஸம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் பேட்டிங் செய்யவில்லை. இவர்களுக்கு பதிலாக ஷான் மசூத் மற்றும் ஹைதர் அலி இருவரும் களம் இறங்கினார்கள். ஷான் மசூத் 39, ஹைதர் அலி 18, கேப்டன் சதாப் கான் 14, இஃப்திகர் அகமத் 22, குஷ்தில் ஷா 0, ஆசிப் அலி 14, முகமத் நவாஸ் 10, மொகமத் வாசீம் 28 ஆகியோர் இந்த ரன்கள் எடுக்க, மழையால் பாதிக்கப்பட்டு 19 ஓவர் கொண்ட இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியில் ஜாஸ் பட்லர் மற்றும் டேவிட் மலான் இருவரும் விளையாட வரவில்லை. பென் ஸ்டோக்ஸ் 36, லிவிங்ஸ்டன் 28 ரன்கள் எடுத்து வெளியேற, ஹாரி புரூக் 45, சாம் கரன் 35 என இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியைக் காட்ட, இங்கிலாந்து அணி 14.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை விரட்டி பிடித்து பாகிஸ்தான் அணியை மிக எளிதாக வென்றது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. மூன்று கேட்ச்களை தவறவிட்டவர்கள், ஒரு எளிதான ரன் அவுட்டையும் தவற விட்டார்கள். கைக்கு வந்த பந்தை பிடிக்காமல் பவுண்டரிக்கு விட்டார்கள். இதெல்லாம் இங்கிலாந்து அணியை மிக எளிதாக வெற்றி பெற வைத்து விட்டது. பெவிலியனில் அமர்ந்து இந்த ஆட்டத்தைப் பார்த்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் மிகவும் கோபமாகக் காணப்பட்டார். அந்த அளவிற்கு பீல்டிங்கில் பாகிஸ்தான் அணி வீரர்களின் செயல்பாடு இருந்தது.