வங்கதேச தொடரிலிருந்து திடீரென விலகிய மூத்த வீரருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிப்பு!

0
3951

வங்கதேச ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முகமது சமிக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவித்திருக்கிறது பிசிசிஐ.

இந்தியா வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே இந்திய அணி அங்கு சென்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருகிற நான்காம் தேதி முதல் ஒரு நாள் போட்டி துவங்குகிறது.இதற்கான பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டிருந்தபோது மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி கையில் திடீரென காயம் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அவரால் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாது என தெரிய வந்திருக்கிறது. ஆகையால் ஒருநாள் தொடரில் இருந்து முகமது சமி விலகி இருக்கிறார்.

தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியுமா? என்பது பற்றி தெரியவில்லை. மேலும் காயத்தின் தீவிரம் பற்றியும் இந்திய அணியின் மருத்துவக் குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.

முகமது சமி விலகி இருப்பதால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், தீபக் சஹர், தாக்கூர் என சில குறைந்த அனுபவமுள்ள வீரர்களே இருக்கின்றனர். இவர்களுடன் குல்தீப் சென் புதிய வீரராக இருக்கிறார்.

சமிக்கு மாற்று வீரர்!

முகமது சமிக்கு மாற்று வீரராக நியூசிலாந்து ஒருநாள் தொடரில் அறிமுகமான உம்ரன் மாலிக் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் நியூசிலாந்து தொடரில் இரண்டு போட்டிகளில் பந்துவீசினார். 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

அனுபவம் இல்லாத இளம் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எப்படி சமாளிக்க போகிறது? என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.