இங்கிலாந்து கவுன்டி அணிக்கு ஒப்பந்தமாகியுள்ள உமேஷ் யாதவ்

0
66
Umesh Yadav

உமேஷ் யாதவ்! 34 வயதான இந்த விதர்பா அணி வீரர் தற்போது இந்திய வேகப்பந்து வீச்சு படையின் ஒரு முக்கியமான வீரராக இருக்கிறார். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசக்கூடிய, பந்தை இருபுறம் ஸ்விங் செய்ய முடிந்த, நல்ல உடற்தகுதி இருக்கின்ற, பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஒருசில வேகப்பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவும் ஒருவர்!

இவரின் வேகமான ஸ்விங் பந்து பந்துவீச்சு திறமையின் காரணமாக முதன் முதலில் 2010ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார், அடுத்து 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இன்டீசிற்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

இவர் ஐ.பி.எல் தொடரில் முதலில் 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லி டேர் டெவில்ஸ் அணியிலும், 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், 2018 ஆம் ஆண்டு முதல் 2020 வரை ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர் அணியிலும், 2021ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடினார். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் உமேஷ் யாதவின் செயல்பாடுகளும், வாய்ப்புகளும் இந்திய அணியில் சீராக இல்லை. ஆனால் அவர் இந்திய டெஸ்ட் அணியில் ஒரு பேக்கப் பாஸ்ட் பவுலராக தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் அவரது பந்துவீச்சு சிறப்பாகவே இருக்கிறது.

ஆனால் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் அவரின் பந்துவீச்சு வெள்ளைப்பந்தில் மிகச்சிறப்பாக மாறி இருந்தது. அவர் திரும்பவும் வெள்ளைப்பந்தில் மீண்டு வந்தார். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 12 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை 7.06 என்ற சிறந்த எகானமியில் கைப்பற்றி இருந்தார்.

இந்த நிலையில் உமேஷ் யாதவ் தற்போது இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்திருக்கிறார். இவர் இங்கிலாந்து கவுன்டி அணியான மிடில்சக்ஸ் அணிக்காக கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியிலும் மற்றும் ராயல் இலண்டன் ஒருநாள் போட்டி தொடரிலும் விளையாட ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்!