பந்து பேட்டில் படாத போதும் அவுட் கொடுத்த 3வது நடுவர் ; ஏமாந்துப் போன ரோஹித் ஷர்மா – கடும் கோபத்தில் ரசிகர்கள்

0
391
Rohit Sharma Ultraedge issue against KKR

ஐ.பி.எல் தொடரின் பதினைந்தாவது சீசன் பல ஏமாற்றங்களை அளித்தே வந்திருக்கிறது. ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் அணிகளான சென்னையும், மும்பையும் ஏறக்குறைய ப்ளேஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறியது, விராட்கோலி, ரோகித் சர்மா போன்ற இந்திய டாப் ஸ்டார் பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங் பார்ம் போன்றவைகள் இந்த ஐ.பி.எல் தொடரின் சுவாரசியத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கிறது என்றே கூறலாம்.

இந்த நிலையில் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டதாகக் கருதப்படுகிற அணிகளான மும்பையும், கொல்கத்தாவும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் போட்டியிட்டு வருகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமான எதிர்கால நம்பிக்கைக்கான ஆட்டமாக இருக்கும்.

- Advertisement -

முதலில் மும்பை அணியின் கேப்டன் டாஸ் வெல்ல, வழக்கமான எல்லா கேப்டன்களையும் போல பந்துவீச்சையே தேர்வு செய்தார். கொல்கத்தாவிற்கு மீண்டும் துவக்கம் தர வந்த வெங்கடேஷ்-ரகானே ஜோடி சிறப்பாக விளையாடியது. அடுத்து வந்த நிதிஷ் ராணாவும் சிறப்பாக விளையாடினார். இதனால் 200 ரன்களை கொல்கத்தா அணி எட்டுமென்று எதிர்பார்த்திருந்த வேளையில், ஆட்டத்தின் 15 மற்றும் 17வது ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தி, கொல்கத்தாவை 165 ரன்களுக்குள் தடுத்துவிட்டார்.

இதற்கடுத்து 166 ரன்கள் என்ற இலக்கோடு, பேட்டிங் பார்மிற்கு திரும்பி இருக்கும் மும்பை அணியின் துவக்க ஜோடி ரோகித்-இஷான் ஜோடி களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரை டிம் செளதி வீச, அந்த ஓவரில் உள்நோக்கி வந்த பந்து ஒன்றை ரோகித் சர்மா தடுத்தாட முயற்சி செய்ய, அது தவறி பந்து விக்கெட் கீப்பர் கைகளுக்குச் சென்று அவுட் முறையீடு செய்யப்பட்டு, அம்பயர் அதை நிராகரிக்க, கொல்கத்தா கேப்டன் மேல் முறையீடிற்குச் சென்றார். இதில் ரோகித் சர்மாவின் பேட்டிற்கு பக்கம் பந்து வராத பொழுதே, ஸ்னிக்கோ மீட்டர் அல்ட்ரா எட்ஜில் சத்தம் எழுந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் மூன்றாவது அம்பயர் அவுட் என அறிவிக்க ரோகித் சர்மா சோகமாக வெளியேறினார். இது மும்பை இரசிகர்களை அதிகப்படியாய் கோபமடைய வைத்திருக்கிறது!