இந்திய குழுவுக்குள் நெதர்லாந்தை அனுப்பியது யுஏஇ; திக் திக் ஆட்டத்தில் நமீபியா வெளியேறியது!

0
1494
T20iwc2022

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று தகுதிச்சுற்றில் மிக முக்கியமான போட்டி ஒன்றில் யுஏஇ மற்றும் நமீபியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நமீபியா வெல்லும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதோடு, ஆஸ்திரேலியா நியூசிலாந்து இங்கிலாந்து இடம்பெற்றிருக்கும் குழுவுக்குள் நுழையும். அதே சமயத்தில் இலங்கை அணி இந்தியா இடம்பெற்றிருக்கும் குழுவுக்குள் நுழையும் என்ற நிலை இருந்தது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற யுஏஇ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் இலங்கை அணியுடன் விக்கெட்டுகளை வேகமாக இழந்தது போல் இழக்கக் கூடாது என்று, இந்தமுறை யுஏஇ அணி மிகப் பொறுமையாக விளையாடியது. இதனால் யுஏஇ விக்கெட்டுகளை பவர் பிளேவில் இழக்கவில்லை.

- Advertisement -

யுஏஇ துவக்க ஆட்டக்காரர் மொகமத் வாசீம் முதலில் பொறுமை காட்டி பின்பு அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடக்கம். கேப்டன் ரிஸ்வான் கடைசி வரை களத்தில் நின்று 29 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். இறுதி நேரத்தில் வந்த பசில் ஹமீத் 14 பந்தில் 25 ரன்களை எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் யுஏஇ அணி 148 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய நமீபியா அணிக்கு ஆரம்பமே பெரிய பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்த நமீபியா அணி அடுத்த 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மேற்கொண்டு இழந்து 12.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விட்டது.

ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் வீசா மற்றும் ட்ரம்பல்மன் இருவரும் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 20 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலைக்கு மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை நகர்த்தி கொண்டு வந்தார்கள். 19வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே வர, கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் அந்த ஓவரை பேட்டிங்கில் அசத்திய முகமது வாசிம் வீச, மிகச் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வீசா ஆட்டமிழந்தார். இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி தோல்வியைத் தழுவி நடப்பு எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

தகுதிச் சுற்று ஏ குழுவில் இலங்கை அணி முதல் இடத்தையும் நெதர்லாந்து அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. முதலிடம் பிடித்த இலங்கை அணி ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள ஏ குழுவுக்கும், இரண்டாம் இடம் பிடித்த நெதர்லாந்து அணி இந்தியா இடம்பெற்றுள்ள பி குழுவிற்கும் வருகின்றன!