என் பந்துவீச்சில் இவர் தான் மிகச் சிறப்பாக விளையாடினார் – டிரென்ட் போல்ட்

0
1778
Trent Boult RR

இந்த ஐ.பி.எல் சீசனில் குஜராத் அணி அளித்த ஆச்சரியத்திற்கு, அடுத்த ஆச்சரியத்தை அளித்த அணி என்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். ஏல முடிவுக்குப்பின் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் கருத்துக் கணிப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பின்தங்கியே இருந்தது. குஜராத் அணிக்கு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறை என்பதுபோல, ராஜஸ்தான் அணிக்கு பெரிய டெய்ல்-என்ட்டர் இருப்பது குறையாகப் பார்க்கப்பட்டது.

ஆனால் இதெல்லாம் ஜோஸ் பட்லரின் சிறப்பான பேட்டிங்கால் எல்லாக் குறையையும் மாற்றிவிட்டது. இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணியின் முதல் ஆட்டத்தில், ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமாரின் நோ-பாலில் இருந்து தப்பிய பட்லர் அடுத்து நிகழ்த்தியது எல்லாம் தரமான சம்பவங்கள்தான். இரண்டு சதங்களோடு இந்தத் தொடரில் அதிக ரன் அடித்த வீரருக்கான ஆரஞ்ச் கேப் இவரிடம்தான் இருக்கிறது. அதேபோல் மும்பை தக்க வைக்காமலும், தற்போதைய ஏலத்திலும் வாங்காது விட்ட தவறை, பெங்களூர் அணியும் செய்து சாஹலை வெளியே விட்டு செய்தது, ராஜஸ்தான் அணிக்குப் பெரிய வசதியாக அமைந்துவிட்டது. அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான பர்பிள் கேப் சாஹலிடம்தான் இருக்கிறது.

- Advertisement -

இதேபோல் வேகப்பந்து வீச்சில் டெக் த ஹிட் பிரசித் கிருஷ்ணா, ஸ்விங் டிரன்ட் போல்ட் என கலக்கி வருகிறார்கள். பந்து மட்டும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் கன்டிசன்ஸ் இருந்தால், இந்த உலகில் மிகப்பெரிய அபாயமான பவுலர் டிரன்ட் போல்ட் என்று உறுதியாய் சொல்லலாம். அவரது பந்து உள்ளே வருகிறதா? வெளியே போகிறதா? என்று பேட்ஸ்மேன்களால் கண்டறிய மிகக் கடினமானது. இந்த ஐ.பி.எல் தொடரில் ஓவர் த ஸ்டம்பில் வந்து, ஆட்டத்தின் முதல் பந்தில் கே.எல்.ராகுலுக்கு க்ளூவே இல்லாமல் செய்த கிளின்-பவுல்ட், டிரன்ட் போல்ட் எவ்வளவு அபாயகரமான பந்துவீச்சாளர் என்று சொல்லும்!

இப்படிப்பட்ட அபாயகரமான பந்துவீச்சாளர், தன்னை மீண்டும் நிரூபிக்கும் முயற்சியில் இருக்கின்ற இந்திய வீரரை புகழ்ந்து பேசியுள்ளார். அந்த வீரர் யாரென்றால் கருண் நாயர். டிரன்ட் போல்ட் இடம் அவரது பந்துவீச்சை சிரமமில்லாமல் எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் யார் என்று கேட்ட பொழுது, அதற்கு அவர் “நான் கருண் நாயருக்கு எதிராக ஆட்டத்தில் பந்து வீசியதில்லை. ஆனால் வலைப்பயிற்சியில் அவருக்கு எதிராக வீசி வருகிறேன். அவருக்கு என்னுடைய எல்லா வகையான பந்துகளையும் கணித்து, எடுத்து அடிக்க முடிகிறது. இதை நான் அவரிடமும் கூறுவேன்” என்றார்!