சர்வதேச அளவில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
748
Sachin Tendulkar and Rohit Sharma

உள்ளூர் போட்டிகள் மற்றும் டொமெஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அனைத்து இந்திய இளம் வீரர்கள் மனதிலும் எப்படியாவது சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்கிற கனவு நிச்சயமாக இருக்கும். இருப்பினும் ஒரு சிலருக்கே அந்த வாய்ப்பு அமையும்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இந்திய அணிக்காக சர்வதேச அளவில் நீண்டகாலம் விளையாடிய வீரர்களும் இருக்கின்றனர். அதேசமயம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் குறுகிய நாட்களிலேயே காணாமல் போன வீரர்களும் இருக்கின்றனர்.

இந்த கட்டுரையில், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அற்புதமாக விளையாடி, அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற டாப் ஃபோர் வீரர்களின் பட்டியலைப் பற்றி பார்ப்போம்.

ரோஹித் ஷர்மா – 35 விருதுகள்

கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் இதுவரை மொத்தமாக 35 முறை சர்வதேச ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு துணை கேப்டனாக விளையாடி வரும் ரோஹித் ஷர்மா சர்வதேச அளவில் 15,116 ரன்களை குவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே இவர் சிறப்பாக விளையாடுவார் என்று கூறிவந்த பிம்பத்தை உடைத்து கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் தனி ராஜாங்கமே நடத்தி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், லண்டனில் தன்னுடைய முதல் ஓவர்சீஸ் சதத்தை ரோஹித் பதிவு செய்து, அந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்திய அணிக்காக இதற்க்கு முன் யுவராஜ் சிங் 34 முறை சர்வதேச ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றிருந்தார். லண்டனில் ரோஹித் தன்னுடைய 35வது ஆட்ட நாயகன் விருதை பெற்று, யுவராஜ் சிங்கை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

சௌரவ் கங்குலி – 37 விருதுகள்

உடைந்து கிடந்த இந்திய அணியை மீண்டும் கட்டமைத்த பெருமை எப்பொழுதும் தாதா என்கிற கங்குலிக்கு சொந்தமான ஒன்று. கிட்டத்தட்ட ஒரு புதிய இந்திய அணியை உருவாக்கி அந்த அணியின் மூலம், இந்திய அணி மீது இருந்த அனைத்து விமர்சனங்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்த நாட்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கங்குலி தலைமை தாங்குதல் மட்டுமல்ல பேட்டிங்கிலும் பெயர் போனவர்.

சர்வதேச அளவில் சௌரவ் கங்குலி 18,575 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச அளவில் சவுரவ் கங்குலி பெற்ற ஆட்டநாயகன் விருதுகளின் மொத்த எண்ணிக்கை 37 ஆகும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி – 57 விருதுகள்

சர்வதேச அளவில் மூன்று வகை கிரிக்கெட் பார்மேட்டிலும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடக் கூடிய வீரர் யார் என்று கேட்டால் அனைவரும் சொல்லும் ஒரு பெயர் கிங் கோலி. மாடர்ன் டே கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை இவர் கட்டி ஆண்டு வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை செய்து அசத்தியுள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை இவர் 23,093 ரன்களை குவித்துள்ளார். அதேசமயம் சர்வதேச அளவில் 57 முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்று சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக உள்ளார். சர்வதேச அளவில் 70 சதங்களை தற்பொழுது வரை குவித்துள்ள விராட் கோலி, நிச்சயமாக 100 சதங்களை கடந்து புதிய சாதனை படைப்பார் என்று அனைத்து இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சச்சின் டெண்டுல்கர் – 76 விருதுகள்

சுமார் இருபத்தி நான்கு ஆண்டு காலமாக கிரிக்கெட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்து, கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியல் மட்டுமின்றி வேறு எந்த பட்டியலை நாம் எடுத்துப் பார்த்தாலும் அந்தப் பட்டியலில் இவர்தான் முன்னிலையில் இருப்பார். அந்த அளவுக்கு இவர் செய்த சாதனைகள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்து மொத்தமாக 34,357 ரன்களைக் குவித்து மிகப்பெரிய தூரத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். சர்வதேச அளவில் 76 முறை ஆட்டநாயகன் விருதுகளை பெற்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. இருப்பினும் இந்த சாதனையை ஏதேனும் ஒரு வீரர் பின்னாளில் முறியடிப்பார். அந்த வீரர் யார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.